/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ ராஜராஜ சோழன் சிலை, கல்வெட்டு: திருச்சி அருகே கோவிலில் கண்டெடுப்பு ராஜராஜ சோழன் சிலை, கல்வெட்டு: திருச்சி அருகே கோவிலில் கண்டெடுப்பு
ராஜராஜ சோழன் சிலை, கல்வெட்டு: திருச்சி அருகே கோவிலில் கண்டெடுப்பு
ராஜராஜ சோழன் சிலை, கல்வெட்டு: திருச்சி அருகே கோவிலில் கண்டெடுப்பு
ராஜராஜ சோழன் சிலை, கல்வெட்டு: திருச்சி அருகே கோவிலில் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 16, 2024 10:55 PM

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியில், சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சோமநாதர் சிவன் கோவில் பாலாலயம் நடக்கவுள்ளது.
கோவிலின் பழமையையும், வரலாற்றையும் பதிவு செய்ய, கல்வெட்டு ஆய்வாளர் ரவிக்குமார், தொல்லியல் ஆய்வாளர் தீபக் கோவில் கல்வெட்டுகளை படியெடுத்து, ஆய்வு செய்தனர். இதில், கோவில் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆய்வாளர்கள் ரவிக்குமார், தீபக் கூறியதாவது:
கோவில் கல்வெட்டுகளால், ராஜராஜசோழன் வாரிசுகள் ராஜேந்திரன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோர் கோவிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கியது தெரிகிறது. இந்த ஊருக்கு, முன்பு பெரிய நாவலுார் என்ற பெயர் இருந்துள்ளது.
கோவிலின் நந்தி மண்டபம் முன், இரு கைகளையும் கூப்பிய நிலையில், நின்ற கோலத்தில் இருக்கும் சிலை, ஊர் மக்களால் முனிவரின் சிலை என்று கருதப்பட்டு வந்துள்ளது. தற்போது நடந்த ஆய்வால், அந்த சிலை அரசன் சிலை என்பதும், இதுபோன்ற சிலை, திருவலஞ்சுழி கோவிலில் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த சிலைகள், தஞ்சை பெரிய கோவில் ஓவியத்தின் ராஜராஜன் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது.
ராஜேந்திர சோழன் தன் தந்தை நினைவாக, எள் கடன் வழங்க, திருவலஞ்சுழியில், ராஜராஜசோழன் சிலையை நிறுவி உள்ளார். அதேபோல், ஆலத்துடையான்பட்டியிலும் ராஜேந்திர சோழன் சிலை நிறுவிஉள்ளார்.
தமிழகத்தில் ராஜராஜசோழனுக்கு சிலை உள்ள முக்கிய கோவில் இது என்பதால், தனிமண்டபம் எழுப்பி சிலையை பாதுகாக்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.