ADDED : ஜூலை 03, 2024 02:06 AM

திருச்சி: திருச்சி, தொட்டியம் அருகே உள்ள கவரப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு, 45. இவர், ஒரு இலவச மின் இணைப்பு வைத்து, ஆழ்துளை போர்வெல்லுக்கு பயன்படுத்தினார். இதுகுறித்த புகாரின்படி, தங்கராசுவை தொடர்புகொண்ட தொட்டியம் மின்வாரிய அதிகாரி திருமாறன் இளம்நம்பி, 49, புகாரை விசாரிக்காமல் இருக்க, 2,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். தங்கராசு, புகாரின்படி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், திருமாறன் இளம்நம்பியை நேற்று கைது செய்தனர்.
வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கலசப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன், 40, இவர், தன் நிலத்திற்கு, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., காந்தி, 48, என்பவரிடம், பட்டா, சிட்டா, கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு, வி.ஏ.ஓ., காந்தி, உதவியாளர்கள் லஞ்சம் கேட்டனர். ராமகிருஷ்ணன் மனமுடைந்து, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முன், நேற்று முன்தினம் தீக்குளித்தார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்கள் மூவரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
உதவி ஆய்வாளருக்கு சிறை
திண்டுக்கல்: திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கணேஷ்குமார். இவர் சீலப்பாடியில் உள்ள தன் வீட்டிற்கு தனிப்பட்டாவாக கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு, திண்டுக்கல் மாவட்ட நிலப்பதிவுகள் துறை ஆவண காப்பக அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவை உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். கணேஷ்குமார், புகாரின்படி, பாக்கியராஜ் மற்றும் அவருக்கு உதவிய சதீஷ்குமாரை, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மின் அதிகாரிக்கு 'காப்பு'
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, நாகுடி துணைமின் நிலைய உதவி மின் செயற்பொறியாளர் பிருந்தாவனன், 50. இவரிடம் மணமேல்குடி நாராயணசாமி, 53, தன் தொழிற்கூடத்திற்கு மீட்டர் வைப்பதற்காக விண்ணப்பித்தார். இதற்கு, பிருந்தாவனன், 1.75 லட்சம் ரூபாய் கேட்டார். நாராயணசாமி புகாரின்படி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, பிருந்தாவனனை கைது செய்தனர்.