ADDED : ஜூன் 06, 2025 06:29 AM

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி
காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் கார்த்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் முத்துகருப்பன், ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற கருப்பொருள் தாங்கிய நடன நிகழ்ச்சி நடந்தது.
--
முருகு மெட்ரிக் பள்ளி
முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளித் தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா பசுபதி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. 'பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும்; மக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தியதோடு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களையும் மரக்கன்று நட ஊக்குவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
--
சிக்கண்ணா கல்லுாரி
மாசுக் கட்டுப்பாடு வாரியம் (திருப்பூர் வடக்கு), சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் திப்பு சுல்தான் பேசுகையில், 'நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது நமது ஒவ்வொரு கடமை. அதிகளவில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் உயிரினங்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும்,' என்றார்.
உதவி பொறியாளர் சங்கரநாராயனன் நன்றி கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம், பொம்மலாட்டம், மவுன நாடகம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் நடத்தினர்.