Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்

புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்

புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்

புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்

ADDED : ஜூன் 22, 2024 05:45 PM


Google News
Latest Tamil News
வெளி மாநில தொழிலாளர் இல்லாமல், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நகராது என்ற அளவுக்கு, அவர்களது பங்களிப்பு அதிகரித்துள்ளது. தொழிலாளர் நலன் கருதி, அந்தந்த மாநில அரசுகள், உதவி மையங்களை நடத்தி வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து, தொழில் நிமித்தமாக லட்சக்கணக்கான தொழிலாளர் திருப்பூரில் தஞ்சமடைந்துள்ளனர். அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து, திருப்பூருக்கு தொழிலாளர்களை அனுப்ப, தனியே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக, மருத்துவ முகாம், நேர்காணல் நடத்தி, தொழிலாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு, மாநில அளவில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற துறைகள் வாரியாக வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது.

தொழிலாளர் உதவி மையம்

ஒவ்வொரு மாநிலம் அல்லது மண்டலங்களில், வடமாநில தொழிலாளர் உதவி மையமும் நேரடியாக செயல்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள், அரசிடம் முன்பதிவு செய்து காத்திருக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான தொழிலாளர் உதவி மையம், திருப்பூரில் செயல்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி, பணியாற்றுவதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் உதவி மையங்கள் உறுதி செய்கின்றன.

தொழிலாளருக்கு கவுன்சிலிங்

அசாம் மாநில தொழிலாளர் நல உதவி மைய பொறுப்பாளர் ராமசாமி கூறியதாவது:

பயிற்சி முடிந்ததும், திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர் விவரம், ரயில் விவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். ரயிலில் வரும் தொழிலாளரை வரவேற்று, அழைத்து சென்று, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஒப்படைப்பதை உறுதி செய்கிறோம்.

மூன்று அல்லது ஐந்து நாள் கழித்து, தொழிலாளர் பேசும் தாய்மொழி தெரிந்த நபர்களை கொண்டு, கவுன்சிலிங் அளிக்கப்படும். தாய்மொழியில் பேசும் நபர் மூலமாக, நம்பிக்கை பெறுகின்றனர். வயது தகுதி இல்லையெனில், சம்பந்தப்பட்ட தொழிலாளர் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தேர்வு செய்ய முகாம்கள்

அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ஆண்டுக்கு நான்கு முகாம் நடத்தி, தொழிலாளர்களை தேர்வு செய்து அழைத்து வருகிறோம். அசாம் கடந்தாண்டு, 11 முகாம்கள் நடத்தினோம். வடமாநில தொழிலாளருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் உதவி மையத்தின் பணியாக உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் தொழிலாளரை சந்தித்து, புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தொழிலாளருக்கு பாதிப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் உதவி மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதன் வாயிலாக கள ஆய்வு செய்து தேவையான உதவிகளைச் செய்கிறோம். சொந்த மாநிலங்களில் பயிற்சி முடித்து, தொழில் நிமித்தமாக வெளிமாநிலம் செல்லும் தொழிலாளருக்கு, மாதம், 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அசாம் மாநில அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, தொழிலாளரை அனுப்பி வைக்கிறது; பின்தொடர்ச்சியாகவும் கண்காணிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

அச்சமில்லை... அச்சமில்லை

''நிறுவனங்களிடம், அவ்வப்போது செயல் அறிக்கையை பெற்று, பணித்திறன் அடிப்படையில் பரிசு வழங்கியும் ஊக்குவிக்கிறோம். திருப்பூரை பொறுத்தவரை, தொழிலில் முதலீடு செய்வதில் பிரச்னை இல்லை. தொழிலாளர் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதற்காகவே, வெளிமாநில தொழிலாளர் அதிகம் அழைத்து வரப்படுகின்றனர். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு, தொழிலாளர் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பித்து வருகிறோம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர், அச்சமின்றி திருப்பூரில் வசித்து வருகின்றனர்'' என்று அசாம் மாநில தொழிலாளர் நல உதவி மைய பொறுப்பாளர் ராமசாமி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us