Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்ட எல்லையில் புறக்காவல் நிலையம் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?

மாவட்ட எல்லையில் புறக்காவல் நிலையம் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?

மாவட்ட எல்லையில் புறக்காவல் நிலையம் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?

மாவட்ட எல்லையில் புறக்காவல் நிலையம் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?

ADDED : ஜூன் 06, 2025 10:54 PM


Google News
உடுமலை; தேவனுார்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் செக்போஸ்ட்டை, புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்டது தளி போலீஸ் ஸ்டேஷன். சில ஆண்டுகளுக்கு முன், கோவை மாவட்டம், கோமங்கலம் போலீசிலிருந்து திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு, தளி போலீஸ் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டன.

இதனால், தளி போலீஸ் கட்டுப்பாட்டில், 41 கிராமங்கள் என எல்லை விரிவடைந்தது. தளி போலீஸ் கட்டுப்பாட்டில், 24 தாய்க்கிராமங்களும், 17 குக்கிராமங்களும் உள்ளன.

ஸ்டேஷன் திருமூர்த்திமலை அருகிலும், கட்டுப்பாட்டு கிராமங்கள் கோவை மாவட்ட எல்லையிலும் உள்ளன. இதனால், இரவு ரோந்து உட்பட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேவனுார்புதுாரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சிற்றாறுகளில் இருந்து, கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தவும், குற்றத்தடுப்பு பணிகளுக்காகவும், தேவனுார்புதுாரில், தற்காலிக போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது.

இந்த செக்போஸ்ட்டுக்கு நிரந்தர கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால், கண்காணிப்புக்கு போலீசார் நியமிப்பதில்லை.

இந்த செக்போஸ்ட்டை புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்தி போலீசார் நியமித்தால், அப்பகுதியில், குற்றத்தடுப்பு பணிகள் எளிதாகும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் இக்கோரிக்கை குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us