ADDED : பிப் 25, 2024 12:38 AM

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்திகளில், முதன்முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. ஏனெனில், 'என்ன ஆனாலும், அதே கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்; நானெல்லாம் மாறவே மாட்டேன்,' என பழைய பல்லவிகளை கூறும் பல வாக்காளர்களுக்கு மத்தியில், 18 முதல், 19 வயதுடைய இவர்கள் எடுக்கும் முடிவு, பெரும் மாற்றங்களை கொண்டு வந்து விடலாம்.
ராஜபிரபு, மூன்றாம் ஆண்டு, சிக்கண்ணா கல்லுாரி: தேர்தல் அறிக்கையில், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும். தேர்வெழுதி, நேர்காணல் சந்தித்து, வேலை கிடைத்து விடுவோர் ஒருபுறம் இருந்தாலும், படித்து முடித்து இன்றும் வேலை தேடுவோர், படித்த படிப்பு ஒன்றாக வேலை மற்றொன்றாக இருப்பவர்கள், அதனையே தொடருபவர் பலர் உள்ளனர். அந்நிலையை மாற்ற அறிவிப்பு வெளியிடுவோருக்கு எனது ஓட்டு.
நித்யா, இரண்டாம் ஆண்டு, சிக்கண்ணா கல்லுாரி: கட்சி எதுவாக இருந்தாலும், இளைஞர்கள், படித்த வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான், இளைஞர்களின் நிலையை உணர்வர். மத்திய, மாநில அரசுகளின் போட்டித்தேர்வு விரிவான, தெளிவாக வழிகாட்டுதல் தற்போது வரை இல்லாமல் உள்ளது. வேலைவாய்ப்பு, தேர்வுக்கு ஒற்றை சாளர முறை அறிவித்தால், பயனுள்ளதாக இருக்கும். அறிவிப்புக்கு ஏற்ப, ஓட்டளிப்பது குறித்து முடிவு செய்வேன்.
தேவதாரணி, மூன்றாம் ஆண்டு, எல்.ஆர்.ஜி., கல்லுாரி: தேர்தல் அறிக்கை, அறிவிப்புகளுக்கு முன்பாக மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கட்சியினர் அறிந்து கொள்ள வேண்டும். மாணவரின் கருத்தையும் கேட்க வேண்டும். படித்த பலரும் சரியான வேலைவாய்ப்புக்கான வழி கிடைக்காமல் உள்ளனர். அரசு கல்லுாரிகளில் அனைத்திலும் வளாக நேர்காணல், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு உறுதி செய்பவருக்கு தயக்கமின்றி, ஓட்டளித்து விடுவேன்.