/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொகுதி யார் வசம்: 'கவுன்ட் டவுன்' துவக்கம்தொகுதி யார் வசம்: 'கவுன்ட் டவுன்' துவக்கம்
தொகுதி யார் வசம்: 'கவுன்ட் டவுன்' துவக்கம்
தொகுதி யார் வசம்: 'கவுன்ட் டவுன்' துவக்கம்
தொகுதி யார் வசம்: 'கவுன்ட் டவுன்' துவக்கம்
ADDED : ஜூன் 02, 2024 02:14 AM

திருப்பூர்;இன்னும், 48 மணி நேரமே உள்ளது என்பதால், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 92 டேபிள்களுக்கும், தனித்தனியே, 'வெப் கேமரா' பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடந்து முடிந்தது; 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. திருப்பூர் தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு செய்த இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், எட்டு 'ஸ்ட்ராங் ரூம்'களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கைக்கு, ஆறு ஓட்டு எண்ணிக்கை மையமும், ஒரு தபால் ஓட்டு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தலா, 14 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்; தபால் ஓட்டு எண்ண, எட்டு டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'வெப் கேமரா'
ஒவ்வொரு டேபிளுக்கும் தனியே, 'வெப் கேமரா' பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம், 92 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 1,745 பேர், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் வடக்கில்
28 சுற்று
திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிக ஓட்டுச்சாவடி இருப்பதால், 28 சுற்றுகளாக ஓட்டு எண்ணப்படும். கோபி - 22 சுற்று, பவானி - 21 சுற்றுகளும், பெருந்துறை மற்றும் அந்தியூரில், தலா, 19 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கும். திருப்பூர் தெற்கு தொகுதியில், 18 சுற்றுகளும், தபால் ஓட்டு எண்ணிக்கை, இரண்டு சுற்றுகளாகவும் நடைபெறும்.
'விவி பேட்' சீட்டு
சரிபார்ப்பு
சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் ஐந்து ஓட்டுச்சாவடிகளின், 'விவி பேட்' சீட்டுகள் எண்ணப்படும். அவற்றை, பதிவான ஓட்டுக்களுடன் சரிபார்த்த பின்னரே தொகுதிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்; அதற்காக, 'விவிபேட்' சீட்டு எண்ண தனி கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது.
சாவிகளை
பெற உத்தரவு
'ஸ்ட்ராங் ரூம்' கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன; கதவில், வேட்பாளர் முகவர்கள் கையொப்பமிட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இரண்டு கதவுகளுக்கு மையமாக ஒட்டிய நோட்டீஸ் கிழியவில்லை; கதவு திறக்கப்படவில்லை என்பதை சரிபார்த்து, கதவு திறக்கப்படும்.
'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு, இரட்டை சாவி பூட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சாவியை பயன்படுத்தினால் மட்டுமே திறக்கவோ, பூட்டவோ முடியும். ஒரு சாவி, தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் இருக்கிறது. மற்றொரு சாவி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக, சார்-நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சார்-நிலை கருவூலத்தில் இருந்து சாவிகளை, 3ம் தேதியே பெற்று வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாலையில்
பணி ஒதுக்கீடு
ஒவ்வொரு டேபிளிலும், மேற்பார்வையாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, சட்டசபை தொகுதி வாரியாக, 14 டேபிள்களுக்கு, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் எந்த டேபிளில் அமர வேண்டும் என்பது, 4ம் தேதி அதிகாலை 5:30 மணிக்குத்தான் தெரியும். தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், குலுக்கல் முறையில், பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பின்னரே, எந்தெந்த டேபிளில் அமர்ந்து ஓட்டு எண்ணுவது என்ற விவரம் தெரியவரும்.
எண்ணிக்கை மையத்தில் இருந்து, 100 மீ., - 200 மீ., எல்லைகளில், வெள்ளைக்கோடு நேற்று வரையப்பட்டுள்ளது.ஒவ்வொரு சுற்று முடிவுகளை, தேர்தல் நடத்தும் அலுவலர் 'மைக்'கில், அறிவிப்பு செய்வார். அதற்காக, கல்லுாரியின் வெளியேயும், ஸ்பீக்கர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுசரிபார்ப்பு
உண்டு
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஒரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தனியே நியமிக்கப்பட்ட இருவர், ஏதாவது இரண்டு 'கன்ட்ரோல் யூனிட்'களை பெற்று, மீண்டும் ஓட்டுக்களை எண்ணி, ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள். அதற்கு பிறகே, அந்தந்த சுற்று முடிவு வெளியிடப்படும்.
தபால் ஓட்டு
தபால் ஓட்டு எண்ண, வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன், தனித்தனி ரேக்குகளுடன் கூடிய பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தபால் ஓட்டு பெட்டிகள், கலெக்டர் அலுவலக ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 4ம் தேதி காலை, 8:00 மணி வரை, தபாலில் வரும் சர்வீஸ் வாக்காளரின் தபால் ஓட்டுகள், எண்ணிக்கைக்கு ஏற்கப்படும்.
சர்வீஸ் வாக்காளரின் ஓட்டுகள் தனியாகவும், தேர்தல் அலுவலர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் செலுத்திய தபால் ஓட்டுகளும் தனியே எண்ணப்படும்.
சரியாக, காலை, 8:00 மணிக்கு, தபால் ஓட்டுப்பெட்டிகள் திறக்கப்பட்டு எண்ணிக்கை துவக்கி வைக்கப்படும். அதற்காக கம்ப்யூட்டர் மற்றும் டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'கன்ட்ரோல் யூனிட்'களில் பதிவான ஓட்டுகள் எண்ண, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 14 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.