Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தினசரி மார்க்கெட் புதிய வளாகம் திறப்பு எப்போது?

தினசரி மார்க்கெட் புதிய வளாகம் திறப்பு எப்போது?

தினசரி மார்க்கெட் புதிய வளாகம் திறப்பு எப்போது?

தினசரி மார்க்கெட் புதிய வளாகம் திறப்பு எப்போது?

ADDED : மார் 16, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றும், திறப்பு விழாவுக்கு தயார்படுத்தாமல் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.

திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், காமராஜ் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த வளாகம் சேதமடைந்த நிலையில், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த வளாகத்தில் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 2020ம் ஆண்டில் துவங்கிய புதிய வளாகம் கட்டுமானப் பணி ஏறத்தாழ நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்த இடத்தில் நீண்ட காலமாக கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள், கட்டுமானப் பணி துவங்கும் வகையில், கடைகளை காலி செய்தனர். பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில், தற்காலிக மார்க்கெட் வளாகம் துவங்கி, செயல்பாட்டுக்கு வந்தது. பழைய வளாகத்தில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் தங்கள் கடைகளை இங்கு இடமாற்றம் செய்தனர்.

இடைப்பட்ட காலத்தில், பலர் தங்கள் வியாபார கடைகளை மாற்றிக் கொண்டனர். சிலர் வேறு தொழில் மற்றும் வேலை என்று மாறி விட்டனர். இதனால், கடைகள் மற்றும் வியாபாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. முன்னர் மார்க்கெட் நடைமுறையில், தனி நபர் ஏலம் அல்லது வியாபாரிகள் சங்கம் சார்பில் மொத்த குத்தகை எடுத்து, வியாபாரிகள் வாடகை செலுத்தி வந்தனர். தற்போதும் இந்த நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய மார்க்கெட்டில் வியாபாரிகள் சங்கம் இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. மார்க்கெட் கடை வியாபாரிகள் சங்கம் என்றும், அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கம் எனவும் இரு சங்கங்களாக மாறி விட்டது.

இரு சங்கங்களும் மார்க்கெட் ஏலத்தை குத்தகையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளன. மாநகராட்சியைப் பொறுத்தவரை, கடை வாடகை கணிசமான தொகை நிலுவையில் உள்ளது. மேலும், கடைகளை மொத்த குத்தகையாக இல்லாமல் தனி கடைகள் அடிப்படையில் வாடகை நிர்ணயம் ஏலம் விட வேண்டும் என்ற முடிவில் உள்ளது.

வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துடன் பல கட்ட சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் சில திருத்தங்கள் செய்வது குறித்தும் அவர்கள் தரப்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை மேற்கொள்வதில் மாநகராட்சி தரப்பில் இன்னும் முழுமை பெறாத நிலை உள்ளது. நடப்பு மாதம் நிதியாண்டு இறுதி என்ற நிலையில், ஏலத்தை நடத்தி முடித்தால், நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும்.

இருப்பினும் ஏலம் விடுவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெறாமல் தடுமாற்றம் நிலவுகிறது. மின் இணைப்புகள் பெறுவதற்கான நடைமுறைகள் துவங்காமல் உள்ளது. எனவே, இதனை விரைந்து முடித்து மார்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us