'தொழில் - தொழிலாளர் நலன் காப்போம்'
'தொழில் - தொழிலாளர் நலன் காப்போம்'
'தொழில் - தொழிலாளர் நலன் காப்போம்'
ADDED : ஜன 31, 2024 12:56 AM

திருப்பூர்:திருப்பூர் தொழிலை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கான கூட்டம் நேற்று மாலை நடந்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து திருப்பூரில் வர்த்தகம் புரியும் இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடந்தது.
ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் எத்திக்கல் டிரேடிங் இனிஷியேட்டிவ் அமைப்பின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் ராணா அலோக் சிங் சிறப்புரையாற்றினார். திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில், ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த, பத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டிராக்டரை, சங்க நிர்வாகிகள், 31வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:
இந்த அமைப்பு என்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை மட்டும் சார்ந்தது அல்ல. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள், தொழில் சங்கங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடு, தன்னார்வ நிறுவனம், இறக்குமதி நிறுவனம் உள்ளிட்டவை அடங்கியது.
தொழிலாளர்கள் நலனை காப்பதோடு, தொழிலையும் காப்பாற்றி, பெரும் முதலீடு கொண்டு செயல்படும் நிறுவனங்களையும் காத்து, வேலை வாய்ப்புகளை தக்க வைத்து, பல்வேறு புதிய நிறுவனங்களை உருவாக்க முடியும். தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட்டு அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்த கூட்டு முயற்சி பெரிய அளவில் உதவும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.