Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மூன்றாம் மண்டலம் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்தாச்சு! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் நிம்மதி

மூன்றாம் மண்டலம் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்தாச்சு! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் நிம்மதி

மூன்றாம் மண்டலம் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்தாச்சு! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் நிம்மதி

மூன்றாம் மண்டலம் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்தாச்சு! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் நிம்மதி

ADDED : மார் 13, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஜன., 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இப்பாசன நிலங்களுக்கு, வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கன அடி நீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

தண்ணீர் திறப்பை தொடர்ந்து, பாசன பகுதிகளில், மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், முதல் சுற்றுக்கு இடைவெளி விடப்பட்டது.

கடந்த பிப்., 24ல் முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது. திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்ட பின், ஒரு வாரத்தில், இரண்டாம் சுற்றுக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், பல ஆண்டுகளாக இயங்கி வந்த மின் உற்பத்தி கட்டமைப்பு பழுதடைந்து, அதனை சரி செய்யும் பணி நடந்தது.

இதனால், காண்டூர் கால்வாயில் நீர் எடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டு, பைபாஸ் வழியாக, வினாடிக்கு, 400 கன அடி வரை மட்டுமே நீர் எடுக்கப்பட்டது. இதனால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயராமல், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது இழுபறியானது.

வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், பாசன நீரும் தாமதமானதால், சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரின்றி காய்ந்தன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் பணி நிறைவு செய்யப்பட்டு, கடந்த, 8ம் தேதி முதல், முழு கொள்ளளவு நீர் எடுக்கப்பட்டு, திருமூர்த்தி அணை மற்றும் ஆழியாறு அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது.

காண்டூர் கால்வாய் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு, அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, மூன்றாம் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு, 300 கன அடி வரை திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரித்து, இன்று காலை முழு கொள்ளளவு நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 18 நாட்களுக்கு பின், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து, தடையின்றி, பாசனத்திற்கு நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'காண்டூர் கால்வாயில் முழு கொள்ளளவு நீர் எடுக்கப்பட்டு, திருமூர்த்தி அணை மற்றும் ஆழியாறு அணைக்கு நீர் சென்று கொண்டுள்ளது. அதனால், இரண்டாம் சுற்றுக்கு, 21 நாட்கள் வழங்கப்பட்டு, மூன்றாம் சுற்றுக்கு முன் இடைவெளி இருக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us