ADDED : பிப் 23, 2024 10:40 PM

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மொழிபெயர்ப்பு திட்டம் மற்றும் திறன் வளர்ச்சி பட்டறை நடக்கிறது.
மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் அமைப்பின் சார்பில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் தேசிய மொழி பெயர்ப்பு திட்டம் மற்றும் திறன் வளர்ச்சி பயிற்சி பட்டறை, பிப்., 26ம் தேதி வரை நடக்கிறது.
துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். சிக்கன்னா அரசு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், 'இலக்கிய மொழிபெயர்ப்பு சிக்கல்கள்' என்ற தலைப்பில் பேசினார்.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பல்வேறு கல்லுாரி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் துறைகளைச்சேர்ந்த 68 பேராசிரியர்களும், ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மொழிபெயர்ப்பு கோட்பாடுகள், மொழிபெயர்ப்பியல், மொழிபெயர்ப்பிற்கும் மொழியிலுக்கும் உள்ள தொடர்பு, அதிலுள்ள சிக்கல்கள், உக்திகள், எந்திர மொழிபெயர்ப்பு உள்ளிட்ட தலைப்புகளில் அந்தந்த துறை நிபுணர்கள் வாயிலாக, பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய மொழிகளின் நடுவண் அமைப்பைச்சேர்ந்த பயிற்சியாளர்கள் வின்ஸ்டன் குரூஸ், சுரேஷ்குமார், மூவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று செயல்முறைகள் குறித்து விளக்கமளிக்கின்றனர்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் வாசுதேவன், ராமநாதன், தனசேகரன், ஜாபர், கவுசல்யா, கவிதா, லட்சுமணன் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.