விதிமீறலால் போக்குவரத்து பாதிப்பு
விதிமீறலால் போக்குவரத்து பாதிப்பு
விதிமீறலால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 08, 2025 10:12 PM
உடுமலை; உடுமலை நகர வீதிகளில் முறையான கண்காணிப்பு இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடுமலை நகரில், வெங்கடகிருஷ்ணா ரோடு, பசுபதி வீதி, கல்பனா ரோடு பகுதிகள் பிரதான வீதிகளாகவும், வணிக வளாகங்கள் நிறைந்த இடமாகவும் உள்ளன. தளி ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கும் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதிகளை பயன்படுத்துகின்றனர்.
அப்பகுதிகளில், பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், கடைகளுக்கும், வேறு பயன்பாட்டிற்கும் வருவோர், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை, ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், கல்பனா வீதி நால் ரோடு சந்திப்பு, பசுபதி வீதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது.
'பார்க்கிங்' இல்லாத இடங்களிலும் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் விதிமுறை மீறி ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.