Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறையுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறையுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறையுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறையுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை

ADDED : செப் 08, 2025 10:05 PM


Google News
உடுமலை; விவசாயிகள் அனைத்து சாகுபடிகளிலும், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை தவிர்க்க தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில், 15,122 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி மற்றும் பல்வேறு தானியங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயத்தில் அதிகளவு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவது, மண் வளத்தையும், விளை பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த அளவில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துமாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது: மண்ணின் வளம், கரிம பொருட்களின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதனை அதிகரிக்கும் பணியில் பசுந்தாள் உரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பயிறு வகை குடும்பத்தைச் சார்ந்த 'பியூரேரியா', கலப்பகோனியம், வைமுசா, கொள்ளு, கொளுஞ்சி மற்றும் சணப்பை போன்றவை பசுந்தாள் உரங்களாகப் பயன்படுவது மட்டுமன்றி, இத்தாவரங்களின் வேர்ப்பகுதியில் வேர் முடிச்சுகளின் உதவியுடன் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்துக் கொண்டு, மண்ணில் நிலைப்படுத்த உதவுகின்றது. இதனால், உரச்செலவை வெகுவாக குறைக்கலாம்.

விவசாயிகள் உழவு செய்துவிட்டு பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூப்பூக்கும் தருவாயில் மடக்கி உழுது விட வேண்டும். இதனால் மண்ணின் அங்கக பொருள் பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது.

குறைவான செலவில் அதிக உற்பத்தி பெற உயிர் உரங்களான 'அசோஸ்பைரில்லம்', பாஸ்போ பாக்டீரியம், டிரைக்கோடெர்மோ, பேசில்லஸ் சப்டிலிஸ் பயன்படுத்த வேண்டும்.

பாரம்பரிய வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், பழக்கரைசல், மோர்க்கரைசல், இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தும் போதும் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும்.

அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்கும் உயிர் உரங்கள், இயற்கை சார்ந்த பொருள்கள், பாரம்பரியம் சார்ந்த காய்கறி விதைகள் போன்ற விழிப்புணர்வு திட்டங்களும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, விவசாயிகள் குறைந்த அளவில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us