/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சூலுார் தொழில் பூங்காவுக்கு திருப்பூர் 3வது திட்ட குடிநீர் சூலுார் தொழில் பூங்காவுக்கு திருப்பூர் 3வது திட்ட குடிநீர்
சூலுார் தொழில் பூங்காவுக்கு திருப்பூர் 3வது திட்ட குடிநீர்
சூலுார் தொழில் பூங்காவுக்கு திருப்பூர் 3வது திட்ட குடிநீர்
சூலுார் தொழில் பூங்காவுக்கு திருப்பூர் 3வது திட்ட குடிநீர்
ADDED : ஜூன் 10, 2025 11:18 PM
திருப்பூர்:
சூலுார் அருகே அமையவுள்ள பாதுகாப்பு தொழிற் துறை பூங்காவுக்கு திருப்பூர், 3வது குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டம், சூலுார், வாரப்பட்டி பகுதியில் தமிழக அரசின் 'சிட்கோ' மற்றும் 'டிட்கோ' தொழிற் பேட்டை அமைக்கப்படுகிறது. சிறு தொழிற்சாலைகள் மற்றும் பாதுகாப்பு தொழிற்துறை பூங்கா அமைக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி நிறுவனங்களை துவக்க உள்ளன.
இதிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அதன் தேவைகளுக்கு உரிய அளவிலான குடிநீர் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக, இந்நிறுவனங்கள், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தை அணுகியுள்ளது.
அதன் சார்பில் திருப்பூரில், 3வது குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் ஆகியன செயல்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம், பவானியில் காவிரி ஆற்றிலிருந்து நீர் பெற்று சுத்திகரிப்பு செய்து, திருப்பூர் பகுதிக்கு வழங்கும் வகையில், 3வது குடிநீர் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் சில பகுதிகள், சில வழியோர ஊராட்சிகளுக்கு குடிநீர் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. முக்கியமாக திருப்பூர் தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே, கோவை மாவட்டம், கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைந்துள்ள தொழிற்பூங்கா வளாகத்துக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சூலுாரில் அமையவுள்ள தொழிற்பூங்காக்களுக்கும் இத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படவுள்ளது. இதற்காக, வீரபாண்டியில், நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது.
புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தும், 3வது குடிநீர் திட்டம் தற்போது 18.5 கோடி லிட்டர் தினமும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தினமும், 25 கோடி லிட்டர் என்ற அளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் உள்ளது.
மாநகராட்சி பகுதியில் தினமும் 9 கோடி லிட்டர் பெறப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கியது போக அதிகளவு நீர் மீதமாகிறது. இதனால், இந்த இரு தொழிற்பேட்டைகளுக்கும் உரிய அளவிலான நீர் வழங்குவதில் தடை இல்லை.
திருப்பூரிலிருந்து பல்லடம், காரணம்பேட்டை, சூலுார் வழியாக தொழிற்பூங்காவுக்கு குழாய் பதித்து குடிநீர் கொண்டு செல்வது குறித்து தொழில் நுட்ப குழுவினர் திட்டம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.