/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
ADDED : ஜன 05, 2024 01:25 AM
மனிதன் இல்லாத உலகில், பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழும்; ஆனால், பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதர்கள் உயிர் வாழ முடியாது' என்றார், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, பறவைகள் தொடர்பான ஆய்வுக்காக செலவழித்த சாலீம் அலி.
பல்லுயிர் பெருக்கம், உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு பறவையினங்கள் என்பது மிக முக்கியம். நம் நாட்டில், 1,350க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சமீப ஆண்டுகளாக, 'பறவையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; அதுகுறித்த புரிதல் மறைந்து வருகிறது' என்பது பறவை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. இதை உணர்த்தும் விதமாக தான், ஆண்டுதோறும், ஜன., 5ம் தேதி தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது: பறவைகள் குறித்த புரிதல் மிகக்குறைவு. தானியம் மற்றும் பழங்களை மட்டுமே உண்ணும் பறவையினங்கள், தனது எச்சத்தின் வாயிலாக, தான் உண்ணும் தானியம், பழங்களை மண்ணில் வளரச் செய்து, பசுமைப் போர்வையை உண்டாக்குகின்றன.
அந்த பசுமைப்பரப்பில் கெடுதல் ஏற்படுத்தும் பூச்சிகள், பறவைகளை உண்டு சமநிலைப்படுத்துகின்றன. வேட்டையாடி வகை பறவையினங்கள், தங்கள் பறவையினத்தையே வேட்டையாடி தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன. இதன் வாயிலாக, பறவைகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வந்துவிடுகிறது.
வனங்களில் இறந்து போகும் பறவை, விலங்கினங்கள்; வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் துாக்கி வீசப்படும் இறைச்சிக்கழிவுகளை தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும் ஊர்ப்பருந்து, காகம் உள்ளிட்ட பறவைகள், அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன.
நீரில் வாழும், நீர்வாழ் பறவையினங்கள் நீர்நிலைகளில் உற்பத்தியாகும் நோய் பரப்பும் கொசு உள்ளிட்ட தேவையற்ற உயிரினங்களை உண்டு, அவற்றை அழிக்கின்றன. இவ்வாறு, சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்துக் கொள்வதில், பறவையினங்களின் பங்களிப்பு மிக முக்கியம்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, நாடு தழுவிய கணக்கெடுப்பில், 49 சதவீதம் பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. பறவையினங்கள் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று,தேசிய பறவைகள் தினம்.