ADDED : ஜூன் 28, 2025 11:55 PM

அவிநாசி : அவிநாசி அருகே தொரவலுாரில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
பெருமாநல்லுார் சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சோமனுார், அவிநாசி, புதுப்பாளையம், தெக்கலுார், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விசைத்தறி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, ஒப்பந்த கூலி மற்றும் பில் கொடுக்காத ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நுால் எடுத்துள்ள விசைத்தறியாளர்களை டெக்ஸ்டைல் நிறுவனம் வாரியாக ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவது, விசைத்தறிக்கு வழங்கப்பட்ட '3ஏ2', மின் இணைப்புக்கு மின் உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஜூலை 5ம் தேதிக்குள் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி மற்றும் பில் வழங்கவில்லை என்றால், வரும், 6ம் தேதி தெக்கலுாரில் கூட்டு கமிட்டி கூடி கடுமையான முடிவு எடுப்பது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.