/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டி.ஆர்.ஓ., சென்றார்... கலெக்டர் வந்தார்! டி.ஆர்.ஓ., சென்றார்... கலெக்டர் வந்தார்!
டி.ஆர்.ஓ., சென்றார்... கலெக்டர் வந்தார்!
டி.ஆர்.ஓ., சென்றார்... கலெக்டர் வந்தார்!
டி.ஆர்.ஓ., சென்றார்... கலெக்டர் வந்தார்!
ADDED : செப் 12, 2025 12:30 AM

திருப்பூர்; கலெக்டர் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால், நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் இரண்டு மணி நேரம் காலதாமதமாக துவங்கியது; இரவு, 7:40 மணி வரை கூட்டம் நடத்தப்பட்டது.
நடப்பு ஆண்டின், இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு, முதல் தளத்திலுள்ள அறை எண்: 120ல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகளும், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், 3:30 மணி முதலே, கூட்ட அரங்கினுள் வந்து அமர்ந்துவிட்டனர். கலெக்டர் வராததால், கூட்டம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாலை, 5:15 மணியளவில், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் அரங்கிற்குள் வந்தார்; இதையடுத்து, டி.ஆர்.ஓ., தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நுகர்வோர் அமைப்பினரோ, 'கலெக்டர் தலைமையில்தான் கூட்டம் நடத்தப்படவேண்டும்' என்றனர். டென்ஷனான டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், அரங்கிலிருந்து வெளியேறி சென்றார். கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததால், அரசு அலுவலர்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த நுகர்வோர் அமைப்பினர், கலெக்டரை சந்தித்து, நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டத்தை அவசியம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டாவது தளத்திலுள்ள அறை எண்: 240 கூட்ட அரங்கில், மாலை, 6:15 மணிக்கு, கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில், நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் துவங்கியது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான அரசு அலுவலர்கள் வெளியே சென்றுவிட்டனர்; இதனால், குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவனர் சரவணன், நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்சா, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட நுகர்வோர் நல அமைப்பினர் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர். முன் எப்போதும் இல்லாதவகையில், இரவு, 7:40 மணி வரை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், நுகர்வோர் அமைப்பினர் பல்வேறு பிரச்னைகளை விளக்கி, அதற்கு தீர்வு ஏற்படுத்துமாறு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது, பேசிய கலெக்டர், 'நுகர்வோர் அமைப்பினர் முன்வைத்துள்ள பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும்,' என, கலெக்டர் உறுதி அளித்தார்.
வரும் நாட்களில், இத்தகைய கூட்டங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில், சரியான நேரத்தில் துவக்கி நடத்த வேண்டும். விடுப்பு இன்றி, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதிப்படுத்தவேண்டும். பிரச்னைகளை பரிசீலித்து, உடனடி தீர்வு காணவேண்டும் என்பது, ஒட்டுமொத்த நுகர்வோர் அமைப்பினரின் வேண்டுகோள்.