/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜவுளி உற்பத்தியாளர் - விசைத்தறியாளர் ஒருங்கிணைப்பு; கூலி பிரச்னை சுமுகம் ஜவுளி உற்பத்தியாளர் - விசைத்தறியாளர் ஒருங்கிணைப்பு; கூலி பிரச்னை சுமுகம்
ஜவுளி உற்பத்தியாளர் - விசைத்தறியாளர் ஒருங்கிணைப்பு; கூலி பிரச்னை சுமுகம்
ஜவுளி உற்பத்தியாளர் - விசைத்தறியாளர் ஒருங்கிணைப்பு; கூலி பிரச்னை சுமுகம்
ஜவுளி உற்பத்தியாளர் - விசைத்தறியாளர் ஒருங்கிணைப்பு; கூலி பிரச்னை சுமுகம்
ADDED : ஜூன் 13, 2025 11:10 PM

பல்லடம்; விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையிலான ஒருங்கிணைப்பு காரணமாக, பல்லடத்தில், கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. இதில், 90 சதவீத தறிகள் கூலி அடிப்படையில் இயங்கி வருகின்றன. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த, 2014ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து வந்தனர். கடந்த, 2022ம் ஆண்டு, அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த இருதரப்பு பேச்சு வார்த்தையில், பல்லடம் ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்த்தி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
உயர்த்தப்பட்ட கூலியில், மீண்டும், 5 சதவீதம் குறைத்து, 15 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது. இதனால், கூலி உயர்வை வலியுறுத்தி மீண்டும் பேச்சு வார்த்தைகள் துவங்கின. இதற்கிடையே, இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முன் வந்தனர். கடந்த, 10ம் தேதி, பல்லடம் அருகே, இரு தரப்பு அமைதிப் பேச்சு வார்த்தையில் கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, கடந்த, 2022ல் அறிவித்த கூலி உயர்வின்படி, 20 சதவீதம் உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர்களும், விசைத்தறி உரிமையாளர்களும், ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியின் பயனாக, நீண்ட காலமாக இழுபறியில் இருந்த கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சி பாதையில் செல்ல, இருதரப்பினர் இடையிலான ஒருங்கிணைப்பு என்பது மிக முக்கியமானது. தொழில் நலனை கருத்தில் கொண்டு, இருதரப்பினரும் இதே போல் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது, ஜவுளி தொழில் துறை சார்ந்த அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ''கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி ஜவுளி உற்பத்தியாளர்களே முன்வந்ததன் காரணமாக, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அவ்வகையில், கடந்த, 10ம் தேதி முதல் கூலி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒப்பந்தப்படி கூலியை வழங்குவதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், இருதரப்பு நிர்வாகிகள் முன்னிலையில் தீர்வு காணப்படும்,'' என்றார்.