ADDED : ஜூன் 27, 2025 11:58 PM

திருப்பூர்; 'நெடுஞ்சாலைத்துறை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டுப்பணி மேற்கொள்ளும் போது, ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தை உயர்த்துவதால், சாலையின் தன்மை பாதிக்கும்.
சாலை போடும் போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். அவ்வாறு செய்வதால், மழையின் போது, வீடுகளுக்குள் மழைநீர் புகாது' என தலைமைச் செயலாளராக இறையன்பு இருந்த போது உத்தரவிட்டிருந்தார். கோர்ட்டும் இதனை வலியுறுத்தியது.
இந்நிலையில், திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் ஆரம்பப்பள்ளி வீதியில், சாலை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், தார் சுரண்டாமலே சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், குடியிருப்பு வாசிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
''ஏராளமான வீடுகள் மற்றும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படும் இவ்வீதியில், ஏற்கனவே, 'சாலை மேலே, வீடு கீழே' என்ற நிலையில் தான் உள்ளது. மீண்டும் அதே சாலையின் மீது தார் ஊற்றினால், சாலையின் உயரம் மேலும் அதிகரித்து, மழையின் போது பெருக்கெடுக்கும் வெள்ளம், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் என்பதால் பழைய சாலையில் போடப்பட்டுள்ள தாரை சுரண்டி எடுத்து, அதன் உயரத்தை குறைத்து, அதன்பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும்'' என வலியுறுத்தினர்.
இதுதொடர்பான செய்தி, கடந்தாண்டு, அக்., 9ம் தேதி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, மேயர் துவங்கி, துணை மேயர், கமிஷனர், உதவி கமிஷனர், மண்டல தலைவர், தலைமை பொறியாளர், செயற் பொறியாளர், தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு வரை, குடியிருப்புவாசிகள் மனுப்போர் நடத்தினர்.
அதன் விளைவாக, முதல்வரின் தனிப்பிரிவு வழிகாட்டுதல் படி, சாலையை சுரண்டி தார் போடுமாறு அறிவுறுத்தல் வர, அதன்படி சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.