Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளிக்கூடம் திறந்தாச்சு... நல்ல நேரம் பிறந்தாச்சு! * ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து குட்டீஸை வரவேற்ற ஆசிரியர்கள்

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... நல்ல நேரம் பிறந்தாச்சு! * ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து குட்டீஸை வரவேற்ற ஆசிரியர்கள்

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... நல்ல நேரம் பிறந்தாச்சு! * ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து குட்டீஸை வரவேற்ற ஆசிரியர்கள்

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... நல்ல நேரம் பிறந்தாச்சு! * ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து குட்டீஸை வரவேற்ற ஆசிரியர்கள்

ADDED : ஜூன் 02, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், குழந்தைகளை ஆசிரியர்கள், ரோஜா பூ, சாக்லெட், பலுான்களை கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆசிரியர் செயல்பாடுகளால் பெற்றோர் அகமகிழ்ந்தனர். பள்ளி வளாகங்கள் திருவிழா கோலம் பூண்டன.

இதுதொடர்பான சிறப்பு தொகுப்பு:

'செல்பி பாயின்ட்'

பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு 'பர்ஸ்ட் டே ஸ்கூல்' என்ற வண்ணக் கொடிகள் வழங்கப்பட்டன. அவற்றை உற்சாகமுடன் குழந்தைகள் ஏந்தி வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் 'பள்ளிக்கு வரும் புதிய குழந்தைகளை வரவேற்கிறோம்' என்ற அலங்கார பிளக்ஸ் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இறைவணக்க கூட்டம் துவங்கும் முன்பு பெற்றோருடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளி மாணவர்களை, பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர். 'பர்ஸ்ட் டே ஸ்கூல்' என்ற 'செல்பி பாயின்ட்'டில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின்மாலா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

மாலையுடன் வரவேற்பு

ஊத்துக்குளி, சுண்டக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் மற்றும் ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். ஊத்துக்குளி நகர் துவக்கப்பள்ளியில் தாரை, தப்பட்டை முழங்க குழந்கைளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. கருமாஞ்சிறை ஊராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கு ரோஜா பூவும், மாணவர்களுக்கு சாக்லெட்டும் வழங்கப்பட்டது.

கடலை மிட்டாய்

பாண்டியன் நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 1ம் வகுப்பு குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கடலைமிட்டாய் வழங்கி வரவேற்றார். பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கவுன்சிலர் முத்துசாமி ஆகியோர் இணைந்து, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 'மாநகராட்சி துவக்கப்பள்ளி - பூலுவப்பட்டி' என அச்சிடப்பட்ட, 'லஞ்ச் டவல்' வழங்கினர்.

'மிக்கி மவுஸ்'

புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி வந்த பள்ளி குழந்தைகளை, இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன், பள்ளி வளர்ச்சிக்குழுவினர் 'மிக்கிமவுஸ்', 'பாண்டாகரடி' பொம்மைகளுடன் பலுான் கொடுத்து வரவேற்றனர்; பள்ளி வளாகத்தில் ஆளுயர பொம்மைகளை கண்ட குழந்தைகள் அழுகையை நிறுத்தி, சிரிக்க துவங்கினர்.

தொடரும் அட்மிஷன்

மார்ச் மாதம் முதல் அட்மிஷன் நடந்தும், அரண்மனைப்புதுார், பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு நேற்றும் பெற்றோர் திரண்டு வந்தனர். அட்மிஷனுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவினர் பெற்றோருக்கு விபரங்களை தெரிவித்தனர். அரண்மனைப்புதுார் பள்ளிக்கு அழுது கொண்டே வந்த ஒன்றாம் வகுப்பு குழந்தையை ஆசிரியர் லோகநாதன் சமாதானப்படுத்தி துாக்கிச் சென்று, வகுப்பறையில் அமர வைத்தார்.

பிரிய மனமின்றி...

கல்வியாண்டின் பள்ளி துவக்க நாள் என்பதால், அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டம் அதிகமாக இருந்தது. முதன்முறை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தவர்கள் பிரிய மனமின்றி, அவர்களுக்கு தெரியாமல் கதவு ஓரத்திலும், ஜன்னல் அருகிலும் நின்று, அமர்ந்து விட்டார்களா, அழுகிறார்களா என கவனித்தனர். பள்ளி நேரம் துவங்க, பள்ளி வளாகத்தை விட்டு பிரிய மனமின்றி, விடை பெற்றனர். மாலையில் பள்ளி விடும் நேரம் முன்பாகவே குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன் காத்திருந்து தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

---

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல் நாள் குட்டீஸூக்கும் பதற்றம் நிறைந்த நாளாகத் தான் இருக்கும். புதிய சூழலை எதிர்கொள்ள இயலாமல் அழுகை முட்டும். அப்போது, அவர்களை அரவணைத்து, அன்பு செலுத்துபவர்கள் ஆசிரியர்கள். அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கண்ணீர் விட்டு கதறிய சிறுமியை தாய் போல் துாக்கிவைத்து அன்பு பாராட்டிய ஆசிரியர்.

தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.

'பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது'

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'ஒற்றுமையை வளர்ப்போம்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பள்ளிகளில் நடந்தது. 'உங்கள் வீட்டுக்கு அருகில் பள்ளியில் இணையாத குழந்தைகள் இருப்பின், அவர்களையும் அழைத்து வர முயற்சி செய்யுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்; பெற்றோராகிய உங்களுக்கு பொறுப்பு உள்ளது, என்பதை உணருங்கள்,' என, பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us