/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் வருவாய்த்துறையினர் விசாரணை அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் வருவாய்த்துறையினர் விசாரணை
அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் வருவாய்த்துறையினர் விசாரணை
அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் வருவாய்த்துறையினர் விசாரணை
அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் வருவாய்த்துறையினர் விசாரணை
ADDED : செப் 20, 2025 11:45 PM

திருப்பூர் : திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பிராசஸ் சர்வர் வீதியில் நேற்று மின் பராமிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பழமையான மரம் ஒன்றை கிரேனில் ஏறி சிலர் வெட்டி சாய்த்து கொண்டிருந்தனர். மின்வாரியம், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி கொண்டிருப்பது தெரிந்தது.
இதனையறிந்த, 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் நந்தகுமார், சட்ட குழு உறுப்பினர்கள் வக்கீல்கள் சண்முக வடிவேல், சுப்ரமணியம் உள்ளிட்டோர் திரண்டனர். இதையடுத்து மரம் வெட்டியவர்கள் பணியை நிறுத்தினர். மரம் வெட்டிய நபர்களிடம் கேட்டதற்கு, 'அருகில் இருந்த பனியன் நிறுவனத்தினர் கூறியதன் பேரில் மரம் வெட்டப்பட்டதாக,' தெரிவித்தனர்.
மரம் வெட்டுவதற்கு வாங்கிய அனுமதி குறித்து கேட்டதற்கு மழுப்பினர். தொடர்ந்து, சரக்கு ஆட்டோவில் வெட்டப்பட்ட பச்சை மரத்தை கொண்டு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கிருந்து கிளம்ப முயன்ற கிரேனை நந்த குமார் நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால், அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து தடுக்க முயன்ற அவர் மீது ஏற்றுவது போல் சென்று நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து திருப்பூர் வடக்கு போலீசார், தெற்கு வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். முறையாக அனுமதியில்லாமல் வெட்டியது தெரிந்தது. மரம் வெட்டியது, அகற்ற முயன்றது மற்றும் கிரேனில் ஏற்ற முயன்றது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், முறையாக அனுமதியில்லாமல் மரம் வெட்டியது தொடர்பாக சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்.ஐ., சுப்புராஜ் தெரிவித்தார்.