ADDED : ஜன 08, 2024 01:39 AM
பொங்கல்;புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டி உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் அறுவடையை முடிக்க விவசாயிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
சோளம் அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இயந்திரங்களின் உதவியுடன் பல விவசாயிகள் அறுவடையை துவக்கி உள்ளனர்.
சோளம் பெரும்பாலும் மாட்டு தீவனத்திற்காகவே சாகுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் பால் விலையை உயர்த்தி உள்ளது. பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாயாவது உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போதைய விலை உயர்வு யானை பசிக்கு சோளப்பொரி போன்றது தான் என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.
கோழி மற்றும் மாட்டு தீவனத்திற்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடையும் தீவிரமடைந்துள்ளது. மக்காச்சோளம் ஒரு கிலோ தற்போது, 23.50 ரூபாய்க்கு விலை போகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''மக்காச்சோளம் கடந்த ஆண்டு விற்பனையான விலைக்கே இந்த ஆண்டும் விலை போகிறது. ஆண்டுக்காண்டு கூலி மற்றும் இடுபொருட்கள் விலை அதிகரித்தே வருகிறது. ஆனால், மக்காச்சோள விலை மட்டும் அதே நிலையில் உள்ளது. மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரித்தால் மட்டுமே விலை உயர்வு ஏற்படும்'' என்றனர்.