பில் கட்டாமல் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்: அரசு பணிக்கான மின் இணைப்பு 'கட்'
பில் கட்டாமல் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்: அரசு பணிக்கான மின் இணைப்பு 'கட்'
பில் கட்டாமல் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்: அரசு பணிக்கான மின் இணைப்பு 'கட்'
ADDED : ஜூலை 13, 2024 03:56 AM

சென்னை: 'அரசு திட்டங்களுக்கான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்கள் பெயரில், தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது' என, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
தமிழகத்தில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, அதற்காக தேவைப்படும் மின்சாரத்திற்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு விண்ணப்பதாரர் பெயரில் வழங்கப்படுகிறது.
தற்காலிக இணைப்பில், மின் பயன்பாட்டு கட்டணம் அதிகம். அதாவது, யூனிட் மின்சாரத்திற்கு, 12.25 ரூபாய் கட்டணம்.
அதனுடன் சேர்த்து மாதந்தோறும் கிலோ வாட்டிற்கு, 562 ரூபாய் நிலை கட்டணம் வசூலிக்கப்படும். கட்டுமான பணி முடிந்ததும், தற்காலிக மின் இணைப்பை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
செலுத்துவதில்லை
இந்நிலையில், அரசு திட்டங்களின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெயரில், தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது என, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு திட்டங்களுக்கான பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள், தற்காலிக மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை மாதந்தோறும் சரிவர செலுத்துவதில்லை. அரசு பணி நடக்கிறது என்பதால், அந்த இணைப்புகளில் மின் வினியோகத்தையும் அதிகாரிகள் துண்டிப்பது இல்லை.
தற்காலிக இணைப்பிற்கு செலுத்திய டிபாசிட் தொகையை விட, மின் கட்டணம் அதிகம் இருக்கும் பட்சத்தில், பணிகளை முடித்து விட்டு, மின் கட்டணம் செலுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விடுகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுகி, நிலுவை கட்டணம் கேட்டால், ஒப்பந்ததாரரிடம் வசூலிக்குமாறு கூறுகின்றனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
துறையிடம் வசூல்
எனவே, அரசு திட்ட பணிகளுக்கான தற்காலிக மின் இணைப்பை ஒப்பந்ததாரர்கள் பெயரில் வழங்கக் கூடாது; தற்காலிக இணைப்புக்கு பின், அந்த இணைப்பானது, யார் பெயரில் நிரந்தர இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதோ, அந்த அதிகாரி பதவியின் பெயரில் தான் வழங்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக, பிரிவு அலுவலக பொறியாளர் களிடம் அறிவுறுத்துமாறு, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஒப்பந்ததாரர்கள் செலுத்தாத மின் கட்டணம், சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.