பொங்கல் பரிசு வினியோகம் துவங்கியது
பொங்கல் பரிசு வினியோகம் துவங்கியது
பொங்கல் பரிசு வினியோகம் துவங்கியது
ADDED : ஜன 11, 2024 07:04 AM

திருப்பூர் : தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகளில், மொத்தம் 7 லட்சத்து 97 ஆயிரத்து 852 அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் உள்ளன.
மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று காலை முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் துவங்கியது. திருப்பூர் மாநகராட்சி செட்டிபாளையம், சத்யா காலனி ரேஷன் கடையில் நேற்று நடந்த, பொங்கல் பரிசு வழங்கும் விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார். கூட்டுறவு துறை இணைபதிவாளர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சியின் 35 வது வார்டு வாலிபாளையம் ரேஷன்கடையில், தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், பொங்கல் பொருள் வினியோகத்தை துவக்கிவைத்தார். இதில், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டோக்கன் வழங்கப்பட்டோர், ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பெற்று வருகின்றனர். கார்டுதாரரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், ஒருகிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. பரிசு தொகுப்புடன் சேர்த்து, இலவச வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ரேஷன்கடையிலும், நாளொன்றுக்கு 200 பேர் வீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. டோக்கன் பெறாத தகுதியான கார்டுதாரர்களும், ரேசன் கடைகளுக்கு சென்று, பரிசு தொகுப்பு பெறலாம்; விடுபட்ட கார்டுதாரர்கள், வரும் 14 ம் தேதி சென்று, பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.