ADDED : ஜன 08, 2024 01:20 AM

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வர்த்தகர்களும், திருப்பூர் வந்து காதர்பேட்டையில் ஆடைகளை கொள்முதல் செய்கின்றனர். காதர்பேட்டையில், பண்டிகை கால ஆர்டர் விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையில், பெரிய அளவு வியாபாரம் இருக்காது என்றாலும், அடுத்தகட்ட வியாபாரத்துக்கான ஆரம்பமாக இது இருக்கும்.
காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்க துணை தலைவர் குமார் கூறுகையில், ''தீபாவளிக்கு பிறகு, காதர்பேட்டையில் வியாபாரம் மந்தமாக இருக்கும்; பொங்கல் பண்டிகை வருவதால், மீண்டும் வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டாமல் போனாலும், பிப்ரவரி மாதத்தில் இருந்து, வடமாநில வியாபாரிகள் வரத்து அதிகரிக்கும். வடமாநிலங்களில் மேலும் சில மாதங்களுக்கு குளிர் நீடிக்கும் என்பதால், பிப்ரவரியில் இருந்து ஆடைகளை கொள்முதல் செய்து எடுத்துசெல்வர். அதன்படி, தற்போதிருந்தே மெதுவாக வர்த்தக விசாரணை நகரத்துவங்கியிருக்கிறது,'' என்றார்.