லாரி மோதி டிரைவர் பலி
திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறையை சேர்ந்தவர் முரளி, 38. ராட்டினத்துாரி போன்ற பொருட்களை வேனில் ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு காங்கயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளகோவில்,குருக்கத்தி அருகே வேனை ரோட்டோரம் நிறுத்தி விட்டு, பின்னால் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த லாரி முரளி மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கள் இறக்கியவர் கைது
காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கீரனுார், ஒக்கிலியங்காட்டுவலசை சேர்ந்தவர் துரைசாமி, 44. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பானை கட்டி போதை தரக்கூடிய கள் இறக்கியதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது, தென்னை பாளையில் கட்டப்பட்டிருந்த பானைகளை சோதனை செய்தனர். ஐந்து லிட்டர் கள் இருந்தது. அவரை கைது செய்தனர்.
விபத்தில் இலங்கை தமிழர் பலி
காங்கயம், வீரணம்பாளையம் கரூர்ரோட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் காளிராஜா, 46; பெயின்டர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து, கடந்த, எட்டு ஆண்டுகளாக வேறு ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து குண்டடம், மறவாபாளையத்தில் வசித்து வந்தார். கடந்த, 20ம் தேதி வீட்டிலிருந்து குண்டடம் செல்வதற்காக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜோதியம்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடந்த போது, தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.