Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீர்வை எதிர்நோக்கி குவியும் மனுக்கள்!

தீர்வை எதிர்நோக்கி குவியும் மனுக்கள்!

தீர்வை எதிர்நோக்கி குவியும் மனுக்கள்!

தீர்வை எதிர்நோக்கி குவியும் மனுக்கள்!

ADDED : செப் 15, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து, 433 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

மசூதி கட்ட எதிர்ப்பு


ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமையில், வி.ஜி.வி., கார்டன் பகுதி பொதுமக்கள்:

திருப்பூர் - காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டனில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஒரு சிலர், தங்கள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு, வெளியூர் சென்றுவிட்டனர். அவ்வாறு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கிய நபர், எவ்வித அனுமதியும் பெறாமல், மதரஸா பள்ளி நடத்திவருகிறார். அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்காக, போர் போடப்பட்டு பணிகளை துவக்கியுள்ளனர். அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த நபரை அழைத்து விசாரணை நடத்தி, சட்ட விரோதமாக மசூதி கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

பட்டா வழங்க வேண்டும்



செவந்தாம்பாளையம் பொதுமக்கள்:

திருப்பூர் தெற்கு தாலுகா, முத்தணம்பாளையம் கிராமத்தில், பூமிதான நிலத்தில், 185 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களில் 150 பேருக்கு, சொந்த வீடு, நிலம் மற்றும் வசதி வாய்ப்புகள் உள்ளன. இதனால், எளிய மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. தகுதியற்றவர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யதுவிட்டு, உண்மையான பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். படியூர் ஊராட்சி ஜெயம் காலனியில் கடந்த 2016 -17 நிதியாண்டில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை 'இ' பட்டாவாக மாற்ற கேட்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க வலியுறுத்தியும், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பள்ளியில் விஷ ஜந்துகள்


பூலுவப்பட்டி அரசு துவக்கப்பள்ளி பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள்:

பூலுவப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை, மாணவ, மாணவியர் 750 பேர் படிக்கின்றனர். இப்பள்ளி அருகே, 14.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பேக்கரி மற்றும் ஷெட் அமைத்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டி காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. புறம்போக்கு நிலத்திலுள்ள முட்புதர்களை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அருகிலுள்ள புறம்போக்கு இடத்தில், கூடுதல் வகுப்பறைகள் கட்டவேண்டும், என்றனர்.

குடிநீர் பற்றாக்குறை


பொங்குபாளையம் மா.கம்யூ.,வினர்:

பொங்குபாளையம் பகுதிக்கு, 25 நாட்களுக்கு ஒருமுறை கூட வழங்குவதில்லை. மாதத்தில் பத்து நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில்லை. பொங்குபாளையம் ஊராட்சிக்கு நாளொன்றுக்கு 2,51,326 லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு, சராசரியாக 2 லட்சத்து 84 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்குவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது; ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர், குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொங்குபாளையம், பரமசிவம்பாளையம் பகுதி மக்களுக்கு, நான்காவது திட்ட குடிநீரை முறையாக சப்ளை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்வேண்டும்.

'குண்டாஸ்' பாயுமா?



பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:

சாமளாபுரம் பேரூராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி, மக்களின் அடிப்படை பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, சமூக பணியில் ஈடுபட்டுவந்தார். ஊழலை அம்பலப்படுத்தியும், சட்ட விரோத செயல்பாடுகளை, அரசு மற்றும் நீதித்துறைக்கு எடுத்துச்சென்று போராடினார். குடியிருப்பு பகுதியில் தார் சாலை அமைப்பது தொடர்பாக, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, ஒருதலைபட்சமாக செயல்பட்டதால், சமூக ஆர்வலர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகா பழனிசாமி, கடந்த 10 ம் தேதி, டூவீலரில் சென்ற சமூக ஆர்வலர் பழனிசாமி மீது கார் ஏற்றி படுகொலை செய்துவிட்டார். விநாயகா பழனிசாமி மீது, போலீஸ் ஸ்டேஷனில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதாலும், பேரூராட்சி தலைவர் என்கிற செல்வாக்கை பயன்படுத்தி, வழக்குகளிலிருந்து தப்பியுள்ளார். இவர் சிறையிலிருந்து வெளியேவந்தால், சமூக ஆர்வலரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, சமூக ஆர்வலர் பழனிசாமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்; பேரூராட்சி தலைவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும், என்றார்.

நிலத்தடி நீர் மாசு



குண்டடம் ஒன்றியம், நந்தவனம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வி மற்றும் பொதுமக்கள்:

தாராபுரம் தாலுகா, நந்தவனம்பாளையம் ஊராட்சி, குங்குமபாளையத்தில், தனியார் நிலத்தில், தென்னை கழிவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. அரசு அனுமதி பெறாமல் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, தென்னை கழிவு பதப்படுத்தும் நிறுவனத்தை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மெழுகுவர்த்தி ஏந்தி...



தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையம், புது காலனி தெரு மக்கள்:

காங்கயம்பாளையம் கிராமத்தில், கடந்த 2022ல், 210 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதிக்கு புது காலனி என பெயரிட்டு, நுாறு குடும்பங்கள் வீடு கட்டி வசித்துவருகிறோம். 20 ஆண்டுகளாகியும் இன்னும் மின் வசதி செய்துதரப்படவில்லை. பட்டா பெற்ற பலர், போதிய வசதியின்றி வீடு கட்டாமல், காலி இடமாகவே வைத்துள்ளனர். அவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கலைஞரின் வீடு கட்டும் திட்டங்களில், வீடு கட்டிக்கொடுக்க ணேவ்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவேண்டும். சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

முதியவர் தீக்குளிக்க முயற்சி

தாராபுரம் தாலுகா, காந்திபுரத்தை சேர்ந்த, 70 வயது முதியவர் செல்வராஜ். கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று மனைவி குப்பாத்தாள், மகன் கணேஷ் ஆகியோருடன் வந்த செல்வராஜ், பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி, தீ குளிக்க முயற்சித்தார். போலீசார் அவரை தடுத்த நிறுத்தி, மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தனது தாத்தா வழி பூர்வீக சொத்து, 5 சென்ட் நிலத்தை, தனது சகோதரிகள் இருவரும் அபகரித்து கொண்டதாகவும்; நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும், அதிகாரிகள் தனக்கு சேரவேண்டிய நிலத்தை அளந்து கொடுக்க மறுப்பதாகவும், போலீசாரிடம் செல்வராஜ் தெரிவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 பைக் ஆம்புலன்ஸ் வாயிலாக, அம்முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று திரும்பிய செல்வராஜ், பூர்வீக நிலத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை மீட்டு கொடுக்க வலியுறுத்தியும், சட்ட விரோதமாக நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us