/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பி.ஏ.பி., மண்டல பாசன காலம் நீட்டிப்பில்... குழப்பமோ குழப்பம்!உரிய விளக்கமளிக்க விவசாயிகள் எதிர்பார்ப்புபி.ஏ.பி., மண்டல பாசன காலம் நீட்டிப்பில்... குழப்பமோ குழப்பம்!உரிய விளக்கமளிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., மண்டல பாசன காலம் நீட்டிப்பில்... குழப்பமோ குழப்பம்!உரிய விளக்கமளிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., மண்டல பாசன காலம் நீட்டிப்பில்... குழப்பமோ குழப்பம்!உரிய விளக்கமளிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., மண்டல பாசன காலம் நீட்டிப்பில்... குழப்பமோ குழப்பம்!உரிய விளக்கமளிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 08, 2024 01:14 AM

உடுமலை:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன காலமானது, அரசாணையின்படி, கடந்த, 6ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், பிரதான கால்வாயில், தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவது விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; இது குறித்து பொதுப்பணித்துறையினர் உரிய விளக்கமளிக்க வலியுறுத்தி, விவசாயிகள் போராட தயாராகி வருகின்றனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., நான்காம் மண்டலத்துக்கு, கடந்தாண்டு செப்., 20ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
முதல் சுற்று பாசனத்தின் போது, பிரதான கால்வாய் இரு முறை உடைந்து, பாசன நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாம் சுற்றுக்கு, மூன்று மாத இடைவெளிக்கு பிறகு, டிச., 16ல், தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது, முதல் சுற்றில், பிரதான கால்வாய் உடைப்பின் போது, தரப்பட வேண்டிய தண்ணீரையும் கூடுதலாக வழங்க ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
பி.ஏ.பி., நான்காம் மண்டலம் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க பெறப்பட்ட அரசாணையின்படி, நிலைப்பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், டிச., 16ல், இருந்து, ஜன., 6 வரை, தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், 21 நாட்களுக்குள் கூடுதலாக, ஒரு சுற்றுக்கு, மொத்தம், 2,000 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நீரிழப்பு உட்பட, நீர் இருப்பு மற்றும் வரத்தினை பொருத்து, தண்ணீர் திறந்து விட அனுமதியளித்து, அரசாணை வெளியானது.
ஆனால், அரசாணையின்படி, 6ம் தேதி திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படாமல், தொடர்ந்து பிரதான கால்வாயில், வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால், உடுமலை கால்வாய், புதுப்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களுக்கு, பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
புதுப்பாளையம் கிளை கால்வாய் விவசாயிகள் கூறியதாவது: பிரதான கால்வாய் உடைப்பின்போது, கிளை கால்வாய்க்கு, 20 மணி நேர தண்ணீர் வழங்கப்படவில்லை. நிலுவையிலுள்ள தண்ணீரை இரண்டாவது சுற்றில் வழங்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வறட்சியால் பாதித்த பகுதிகளில், குளங்களுக்கு தண்ணீர் கேட்டும் நடவடிக்கை இல்லை. ஆனால், அணையிலிருந்து பிரதான கால்வாயில், அரசாணை காலத்தை விட கூடுதல் நாட்கள், தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறையினர் முறையாக விளக்கம் எதுவும் அளிக்க மறுக்கின்றனர். கிளை கால்வாய்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து துல்லியமான அறிக்கை வழங்க வேண்டும்.
பாசன காலம் நீட்டிக்கப்பட்டிருந்தால், அதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும், நீட்டிப்பு காலத்தில், பாசனம் பெறும் பகுதிகள் குறித்தும் உரிய விளக்கமளிக்க வேண்டும்.
நியாயமான கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நான்காம் மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்றுக்கு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டது போல, 2,000 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே அணையிலிருந்து பயன்படுத்த முடியும். கூடுதலாக அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது.
அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட பாசன நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீரை பயன்படுத்த முடியாததால், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பாசன காலம் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்றில் தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு மட்டும், பிரதான கால்வாயில் இருந்து நீட்டிப்பு காலத்தில், தண்ணீர் வழங்கப்படும். இதில், எவ்வித குழப்பமும் இல்லை. குளங்களுக்கு தண்ணீர் தர வாய்ப்பில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.