/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரம் அருளும் அம்பிகைக்கு நவராத்திரி விழா கொலு வழிபாடு நாளை முதல் துவக்கம் வரம் அருளும் அம்பிகைக்கு நவராத்திரி விழா கொலு வழிபாடு நாளை முதல் துவக்கம்
வரம் அருளும் அம்பிகைக்கு நவராத்திரி விழா கொலு வழிபாடு நாளை முதல் துவக்கம்
வரம் அருளும் அம்பிகைக்கு நவராத்திரி விழா கொலு வழிபாடு நாளை முதல் துவக்கம்
வரம் அருளும் அம்பிகைக்கு நவராத்திரி விழா கொலு வழிபாடு நாளை முதல் துவக்கம்
ADDED : செப் 21, 2025 06:32 AM

திருப்பூர்: வீடுகள் மற்றும் கோவில்களில், கொலு மேடையில் வண்ணமயமான பொம்மைகள் மற்றும் தெய்வ சிலைகளையும் வைத்து, ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வழிபாடு நாளை துவங்குகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, நவராத்திரி விழாவில், கொலு பொம்மைகளுடன் மும்மூர்த்திகளையும், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபடுவது வழக்கம். படிகள் மேல்நோக்கி செல்வது போல், மனிதர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், 5, 7 அல்லது 9 படிகளுடன் கொலு அமைக்கப்படுகிறது.
முதல்படியில் இருந்து, ஆறாவதுபடி வரையில், ஓரறிவு தாவரங்கள் துவங்கி, ஆறறிவு பெற்ற மனிதர்கள் பொம்மைகள் வரை அடுக்கி வைக்க வேண்டும்.
ஏழாவது படியில், முனிவர்கள், தேவாதிதேவர்கள், மகான்கள் பொம்மைகளை வைக்கலாம். எட்டாவது படியில், இந்திரன், குபேரன், நவகிரஹங்களை வைக்கலாம். ஒன்பதாவது படியில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் சிலைகளையும், முப்பெரும் தேவியர் சிலைகளையும் வைக்கலாம்.
ஆண்டுக்கு ஆண்டு, கொலு வளர்ச்சி அடைவது போல், குடும்பமும் வளரும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
செடி, கொடி, தாவரம், மரம்; கடல் வாழ் உயிரினங்கள், ஊர்வன, கிளி, கழுகு உள்ளிட்ட பறக்கும் பறவைகள், நான்குகால் விலங்குகள், மனிதர்கள், ஹிந்து பாரம்பரிய குடும்ப விழாக்கள், காதணி விழா, திருமணம், பூப்பு நன்னீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா, அரசர்கள் நடத்திய தர்பார் மண்டபம், மாட்டுவண்டி என, ஏராளமான பொம்மைகள், புதிய வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
நாளை முதல், கோவில் மற்றும் வீடுகளில் கொலு வழிபாடு துவங்கும். வரும், அக். 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும், 2ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
முதல் நாளில், மகேஸ்வரி, 2வது நாளில் ராஜ ராஜேஸ்வரி, 3வது நாளில் வராகி, 4வது நாளில் மகாலட்சுமி, 5வது நாளில் மோகினி, 6வது நாளில் சண்டிகா தேவி, 7வது நாளில் சாம்பவி துர்க்கை, 8வது நாளில், நரசிம்ம தாரிணி, 9வது நாளில் பரமேஸ்வரியையும், 10வது நாளாகிய விஜயதசமி நாளில், பார்வதியின் ஸ்துால வடிவமாகிய விஜயாவை இனிப்பு பதார்த்தங்கள், பாயசம் படைத்து வழிபடலாம் என, சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர்.