/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம்; 30 பணியாளர் இருந்தால் அத்தியாவசியம் தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம்; 30 பணியாளர் இருந்தால் அத்தியாவசியம்
தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம்; 30 பணியாளர் இருந்தால் அத்தியாவசியம்
தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம்; 30 பணியாளர் இருந்தால் அத்தியாவசியம்
தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம்; 30 பணியாளர் இருந்தால் அத்தியாவசியம்
ADDED : மே 31, 2025 05:25 AM

திருப்பூர்; 'ஒரு நிறுவனத்தில், 30க்கும் அதிகமான பணியாளர் இருந்தால், கண்டிப்பாக தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, தொழில் பயிற்சி வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் (நாட்ஸ்) தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், திறன் மேம்பாடு மற்றும் 'சமர்த்' திட்ட குழு தலைவர் சக்திவேல் வரவேற்று பேசுகையில், ''தேசிய தொழில் பழகுனர் திட்டத்தின் மூலமாக, வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு இடையேயான இடைவெளியை குறைக்க உதவியாக இருக்கும். சங்க நிர்வாகிகளின் முயற்சியால், இத்தகைய அரசு திட்டங்கள் தொடர்பாக,ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
மத்திய அரசின், தொழில் பழகுனர் நலவாரிய உதவி இயக்குனர் பால் எட்வர்ட் மற்றும் ஆலோசகர் சரவணக்குமார் ஆகியோர், தேசிய தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் தொடர்பாக பேசியதாவது:
தேசிய தொழில் பழகுனர் திட்டம், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள திறன் இடைவெளியை நிரப்ப உதவுகிறது. வேலை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 'டிப்ளமோ' மற்றும் பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தால் அரசு ஊக்கத்தொகையுடன், பயிற்சி பெறலாம்.
அரசு அறிவித்துள்ள இணையதளத்தில், தொழில் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான தொழில் பழகுனர் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம்.
குறைந்தபட்சம், நான்கு அலுவலர்களை கொண்ட நிறுவனங்கள், இத்திட்டத்தில் பயன்பெறலாம். நிறுவனத்தில், 30க்கும் அதிகமான அலுவலர்கள் இருந்தால், கண்டிப்பாக இத்திட்டத்தில் பயிற்சி பெற வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சி திட்டத்தில், குறைந்தபட்ச ஊக்கத்தொகையாக, பட்ட தாரிகளுக்கு, மாதம், 9000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்; அதில், 4,500 ரூபாயை அரசு, நிறுவனத்துக்கு மானியமாக வழங்கும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 70100 72302 என்ற எண்களில் அணுகலாம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துணை குழு தலைவர் சிவசுப்பிரமணியம், இத்திட்டத்தை, தொழில்துறையினர் எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று விளக்கி பேசினார். ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.