Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு? கலெக்டரிடம் துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் புகார்

கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு? கலெக்டரிடம் துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் புகார்

கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு? கலெக்டரிடம் துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் புகார்

கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு? கலெக்டரிடம் துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் புகார்

ADDED : செப் 01, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
து லுக்கமுத்துார் கூட்டுறவு சங்கத்தில், பல லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடப்பதாக, பால் உற்பத்தியாளர்கள் திரண்டுவந்து, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்பட அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்; அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக துறைசார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டது.

பால் சங்கத்தில் முறைகேடு

துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரண்டுவந்து, கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அளித்தனர். பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: அவிநாசி தாலுகா, துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு, பால் வழங்கி வருகிறோம். கூட்டுறவு சங்கத்தில், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெறுகிறது.

கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காதவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு, மாதந்தோறும் கணிசமான தொகை அந்தநபர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் கொடுக்கும் பாலுடன் தண்ணீர் கலக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படுவதில்லை. இப்பிரச்னை குறித்து, ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கலெக்டர் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆட்டோ டிரைவர்கள் குமுறல்

பல்லடம் பகுதி ஆட்டோ டிரைவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், புதிய ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: பல்லடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆட்டோ ஸ்டாண்டில், புதிய ஆட்டோக்களை இணைப்பது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 2024, ஜூன், நடப்பாண்டு மே, ஆக., என, நான்கு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கடந்தமாதம் நடத்திய பேச்சுவார்த்தை யில், 29 பேர் கொண்ட ஆட்டோ டிரைவர்களுக்கும் நல்ல தீர்வு வழங்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் கோரிக்கை தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதால், அடுத்தகட்டமாக போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

குற்றச்செயல்களுக்கு வாய்ப்பு

திருப்பூர் மாவட்ட டூவீலர் ஆலோசகர் நல சங்கத்தினர் அளித்த மனு: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் ஆர்.சி.,புக் ஆவணங்கள் வாங்கிக்கொண்டு, சட்ட விதிமுறைப்படி செயல்படுகிறோம். சிலர், வாகனத்தை மட்டும் அடமானமாக பெற்றுக்கொண்டு, வட்டியும் வாங்கிக்கொண்டு, வாடிக்கையாளர்களை தவணை கட்டவிடுவதில்லை. இது குறித்து கேட்டால், வாகனம் எங்களிடம் இல்லை என பொய் சொல்கின்றனர். வாகனங்களை அடமானம் வாங்கிக்கொண்டு, ஆர்.சி.,புக் இல்லாமல் கடன் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.சி., புக் ஒருவரிடம், வாகனம் வேறொருவரிடமும் இருப்பதால், அந்த வாகனங்கள் குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், வாகன உரிமையாளரும், வாகனத்துக்கு பைனான்ஸ் செய்த நிறுவனத்தினரும் பாதிக்கப்படுகிறோம்.

மயானம் செல்ல சிக்கல்

திருப்பூர், முத்தணம்பாளையம், ஏ.டி., காலனியை சேர்ந்த பொதுமக்கள் 80 பேர், மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்திதரக்கோரி மனு அளித்த பின், அவர்கள் கூறுகையில், 'ஏ.டி., காலனியில், 200 குடும்பங்கள் வசிக்கிறோம். 1 கி.மீ., துாரத்தில் உள்ள மயானத்துக்கு சாலை வசதி இல்லை. முள் பாதைகளை கடந்து, இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்ல, மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மயானத்துக்கு செல்ல சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும்,' என்றனர்.

புறவழிச்சாலை வேண்டாம்

'பல்லடத்தில் புறவழிச்சாலை அமைந்தால், குறு, சிறு , நடுத்தர விவசாயிகளில் நிலங்கள் பாதிக்கப்படும்; கோவை நகரை சுற்றி ஏராளமான சாலைகள் செல்கின்றன. அவற்றில் தேவையானவற்றை அகலப்படுத்தினாலே போதும். புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியக் குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

வேலி அமைக்கலாமா?

ஊத்துக்குளி தாலுகா, நீலாக்கவுண்டம்பாளையம் மக்கள் அளித்த மனு: நீலாக் கவுண்டம்பாளையம், தென்முக காங்கயம்பாளையம், கஸ்துாரிபாளையம் கிராமங்களில், 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறோம். மூன்று தலைமுறைக்கும் மேலாக நாங்கள் பயன்படுத்திவரும் வழித்தடத்தை, கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் நிர்வாகம் வேலி அமைத்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதனால், அரசு மருத்துவமனை, பள்ளி மற்றும் மயானத்துக்கு செல்வதற்கு, 600 மீட்டர் துாரத்துக்கு பதிலாக, 5 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இப்பாதை அமைந்துள்ள நிலம், எங்கள் முன்னோர்களால் பல ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இப்பாதை, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு அத்தியாவசியமாக உள்ளது. எனவே, பாதையை மட்டும் விட்டுவிட்டு, மீதமுள்ள இடங்களில் கோவில் நிர்வாகம் தங்கள் திட்டங்களை செயல்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

கூட்டம் நடத்த வேண்டும்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்: மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். கடந்த மாத கூட்டம், எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது. பிரச்னை, கனிமவளம், ஐ.டி.பி.எல்., காஸ் குழாய், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இவற்றை குறைகேட்பு கூட்டத்தில் மட்டுமே தெரிவிக்கமுடியும். குறைகேட்பு கூட்டத்தை ரத்து செய்தது, ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை. ஆக., மாத கூட்டத்தை, இம்மாதம் முதல் வாரத்திலும், இம்மாத கூட்டத்தை, மாத கடைசியிலும் நடத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us