/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவசாயிகளுக்கு வாழைத்தார் ஏலம் பலன் தருமா?விவசாயிகளுக்கு வாழைத்தார் ஏலம் பலன் தருமா?
விவசாயிகளுக்கு வாழைத்தார் ஏலம் பலன் தருமா?
விவசாயிகளுக்கு வாழைத்தார் ஏலம் பலன் தருமா?
விவசாயிகளுக்கு வாழைத்தார் ஏலம் பலன் தருமா?
ADDED : பிப் 10, 2024 12:17 AM
திருப்பூர்;சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடந்த கூட்டுறவுத்துறை முடிவெடுத்துள்ளது; இது நேர்மறை மற்றும் எதிர்மறை விவாதங்களை கிளப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், குன்னத்துார் உள்ளிட்ட இடங்களில், 4,500 முதல், 5,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 90 சதவீதம் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. விளைவிக்கப்படும் வாழை, பெரும்பாலும், கேரளாவுக்கு 'சிப்ஸ்' தயாரிப்புக்கென அனுப்பி வைக்கப்படுகிறது. பிற சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாழைத்தார் ஏலம் நடத்த, கூட்டுறவு துறை முடிவெடுத்து, கருத்துக்கேட்பு கூட்டத்தையும் சமீபத்தில் நடத்தியது. இது, விவசாயிகள் மத்தியில் நேர்மறை மற்றும் எதிர்மறை விவாதங்களை கிளப்பியுள்ளது. 'விவசாயிகள், வியாபாரிகளுக்கு நேரடி தொடர்பு ஏற்படும் என்பதால், இத்திட்டம் வரவேற்க்கதக்கது' என, விவசாயிகள் சிலர் கூறுகின்றனர்.
இடைத்தரகர் பிடியில்...
சேவூர் பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது:வாழைத்தார் வியாபாரத்தில் வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடையே 'புரோக்கர்'கள் தான் பாலமாக செயல்படுகின்றனர். 'புரோக்கர்' வாயிலாக தான், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று வாழைத்தார் வெட்டி, தங்கள் வாகனங்களிலேயே கொண்டு செல்கின்றனர். புரோக்கர் தலையீடு இல்லாமல், எந்தவொரு வியாபாரியாலும் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு, 'புரோக்கர்'கள் வலுவாக காலுான்றியுள்ளனர். இதற்கென விவசாயிகள், வியாபாரிகளிடம் இருந்து கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.
அன்றைய சந்தை நிலவரப்படி, புரோக்கர்கள் தான் வாழைத்தாருக்கான விலையை நிர்ணயிக்கின்றனர். சில புரோக்கர்கள், ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு மாதிரி, விலை கூறுகின்றனர். இருப்பினும், விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து வாழைத்தாரை வெட்டி, அதற்குரிய பணத்தை வியாபாரிகள் கொடுத்து செல்வதால், 2,3 ரூபாய் குறைவாக கிடைத்தாலும் கூட விவசாயிகள் அதை பொருட்படுத்துவதில்லை.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வாயிலாக நடத்தப்படும் ஏலத்துக்கு, விவசாயிகளே வாழைத்தாரை வெட்டி எடுத்து செல்ல வேண்டும்; இதற்கு ஆட்கள், வாகன செலவையும் அவர்கள் ஏற்க வேண்டியுள்ளது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறை உள்ள இச்சமயத்தில், நடைமுறை சிக்கல் தான் ஏற்படும். வாழைத்தாரை இருப்பு வைத்தும் விற்க முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.