ADDED : மே 24, 2025 11:17 PM
திருப்பூர்: 'ஜாப் ஒர்க்' கட்டணம், ஜூன் 1 ம் தேதி முதல், 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக, பின்னலாடை உற்பத்தி மந்தமான சூழலில் இருந்தது. இதனால், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், சாயத்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சாய ஆலைகள், ஒவ்வொரு ஆண்டும் தரச்சான்று பெறுவது உள்ளிட்ட செலவுகளையும் செய்து வருகிறோம்.
பல்வேறு வகையில் உற்பத்தி செலவு அதிகமாகிவிட்டதால், 'ஜாப் ஒர்க்' கட்டணத்தை, ஜூன் 1ம் தேதி முதல், 20 சதவீதம் உயர்த்த சாய ஆலைகள் முடிவு செய்துள்ளன. அரசு நிர்ணயித்துள்ள, 45 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, தொழில்கள் ஆரோக்கியமாக செயல்பட முடியும் என்பதை, ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் பரிசீலிக்க வேண்டும்.
சாய ஆலைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், ஜூன் 1 முதல், 20 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்; கட்டணத்தை, உரிய காலக்கெடுவுக்குள் வழங்கி உதவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.