Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகரில் தோட்டக்கலை பூங்கா திட்டம்; நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

நகரில் தோட்டக்கலை பூங்கா திட்டம்; நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

நகரில் தோட்டக்கலை பூங்கா திட்டம்; நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

நகரில் தோட்டக்கலை பூங்கா திட்டம்; நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

ADDED : செப் 04, 2025 10:51 PM


Google News
உடுமலை; உடுமலை வட்டாரத்தில் மட்டும், மா, தென்னை என தோட்டக்கலை சார்ந்த சாகுபடிகள் மட்டும், 20 ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, தோட்டக்கலைத்துறை சார்ந்த மானியத்திட்டங்கள் மற்றும் செயல்விளக்க திடல்கள் அமைக்க, உடுமலை பகுதிக்கு அதிக தேவையுள்ளது. இந்நிலையில், கடந்த, 2019ல், அரசின் தோட்டக்கலை பண்ணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பண்ணை திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், மடத்துாரில், 10 ஏக்கர் பரப்பளவில், அமைக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்குப்பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

வறட்சியான பகுதியில், பண்ணை அமைந்துள்ளதால், கோடை காலத்தில், அனைத்து பணிகளும் பாதிக்கிறது.

உடுமலையில் இருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதால், நாற்றுகளை பெறவும், இதர பணிகளுக்காகவும், விவசாயிகள் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால், பண்ணையை இடம் மாற்ற வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2022ல், தமிழக அரசு, 24 இடங்களில், தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்துக்கு, உடுமலையில், பூங்கா அமைக்க இடத்தேர்வு பணிகள் நடந்தது. அரசு நிலம் இல்லாதபட்சத்தில், கோவில் நிலங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட தோட்டக்கலை பூங்கா அமைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஹிந்து அறநிலையத்துறை, தோட்டக்கலைத்துறையை ஒருங்கிணைத்து, அதற்கான முன்மொழிவும் தயாரிக்கப்பட்டது. முன்மொழிவில், தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், தோட்டக்கலை சார்ந்த நாற்று, மரக்கன்றுகள் உற்பத்திக்கான பண்ணை அமைக்கலாம்.

மேலும், நகரின் அருகில் இருப்பதால், தோட்டக்கலை சார்பில், அழகிய பூங்கா அமைக்கவும், தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், விவசாயிகளுக்கு பலனுள்ளதாகவும், பூங்கா வாயிலாக அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்மொழிவுடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இடமும், புதர் மண்டி, சீமைகருவேலன் காடாக மாறி, சமூக விரோத செயல்களின் மையமாக மாறி விட்டது. நகரின் அருகிலுள்ள காலி நிலத்தை முறையாக பயன்படுத்தும் வகையில், கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கீவு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us