நீர் வழிப்பாதையில் குப்பை குவியல்
நீர் வழிப்பாதையில் குப்பை குவியல்
நீர் வழிப்பாதையில் குப்பை குவியல்
ADDED : ஜூன் 30, 2025 12:30 AM

சேவூர்; சேவூரில் இருந்து கோபி செல்லும் ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அருகிலேயே சேவூர் குளத்திற்கு நீர்வழிப்பாதை அமைந்துள்ளது.
குடியிருப்பு பகுதி முன்பாக சேவூர் ஊராட்சியில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், வணிக கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும், மக்காத கழிவுகள் என அனைத்தையும் ஊராட்சி நிர்வாகத்தினர் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் வீடுகளில் வசிக்க முடியவில்லை. கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஈக்கள் அதிகளவில் வீடுகளுக்குள் புகுந்து உணவு, தண்ணீர் என அனைத்திலும் மொய்க்கின்றன. மாலை நேரங்களில் கொசு தொந்தரவு அதிகமாக உள்ளதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால், 'குப்பை மற்றும் கழிவுகள் கொட்ட வேறு இடம் இல்லாததால் இங்கு வந்து கொட்டுவதாக கூறுகின்றனர்' என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
'ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்ட, குடியிருப்பு இல்லாத பகுதியை தேர்வு செய்ய வேண்டும்; குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்கின்றனர் பொதுமக்கள்.