/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பை கொட்டும் விவகாரம்; அமைதிப்பேச்சில் சலசலப்பு குப்பை கொட்டும் விவகாரம்; அமைதிப்பேச்சில் சலசலப்பு
குப்பை கொட்டும் விவகாரம்; அமைதிப்பேச்சில் சலசலப்பு
குப்பை கொட்டும் விவகாரம்; அமைதிப்பேச்சில் சலசலப்பு
குப்பை கொட்டும் விவகாரம்; அமைதிப்பேச்சில் சலசலப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:55 PM

திருப்பூர் : நெருப்பெரிச்சல் பகுதி பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னை குறித்த அமைதி பேச்சுவார்த்தையில் சலசலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் எந்த முடிவும் ஏற்படாமல் பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அப்புறப்படுத்தப்படுகிறது. இதை வாகனங்களில் சேகரித்து செல்லும் நிறுவனம் அவற்றை, பாறைக்குழியில் கொண்டு ெசன்று கொட்டுகிறது.
தற்போது, நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று குப்பைகழிவுகளை கொண்டு சென்று கொட்டி, பாறைக்குழி நிரப்பும் பணி நடக்கிறது.
அங்கு குப்பை கொட்டும் பணி துவங்கிய நிலையில் கடந்த வாரம், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கை ஆகியன குறித்து மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் விளக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த சில தரப்பினர் ஏற்றுக் கொண்டனர்.
அங்கு குப்பை கொட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குப்பைகள் கொட்டுவதற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று காலை இதுகுறித்து அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில், நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர், சுற்றுப்பகுதி பொதுமக்கள் மற்றும் சில அமைப்பினர் இதற்காக வந்திருந்தனர். மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
வாக்குவாதம்
மாநகராட்சி தரப்பில், இந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது; வேறு ஏதேனும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவையென்றாலும் அதை மேற்கொள்ள தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் அப்பகுதி பொதுமக்கள் தவிர வேறு பகுதியினர் அடங்கிய சில அமைப்பினர் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு நடவடிக்கையை தனித்தனியாக, அமைப்பு வாரியாக மேற்கொள்ளலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கடுமையாக இதை ஆட்சேபித்து, வாக்குவாதம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் இதில் எந்த முடிவும் ஏற்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.
பல ஏக்கரில் பூங்கா
மாநகராட்சி உறுதி
பாறைக்குழி நிரம்பும் வரையில் குப்பை கழிவுகளை கொட்டி, காளம்பாளையம் பகுதியைப் போல் முழுமையாக பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அங்கு குப்பை கொட்டி நிரப்பி, மண் கொண்டு மூடி நிலம் சமன் செய்து, பல ஏக்கர் பரப்பில் பூங்காவும், மரம் நட்டு பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.