ADDED : மே 31, 2025 05:29 AM

அவிநாசி; நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்கவில்லை.
இதனால், 127 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, நடுவச்சேரி பி.ஏ.சி.பி., முன் விவசாயிகள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவிநாசி போலீசார், விவசாயிகளை கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ , கோவிந்தராஜ், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால், காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
விவசாயி பால்ராஜ் கூறியதாவது:
கூட்டுறவு நிறுவனங்களில் 2021 ஜன., 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நடுவச்சேரி கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளின் அலட்சியத்தால், பயிர்க்கடன் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், தள்ளுபடி திட்டம், 127 விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக பலருக்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.