/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: கடைகள் வைக்காமல் கண்காணிக்கணும்முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: கடைகள் வைக்காமல் கண்காணிக்கணும்
முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: கடைகள் வைக்காமல் கண்காணிக்கணும்
முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: கடைகள் வைக்காமல் கண்காணிக்கணும்
முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: கடைகள் வைக்காமல் கண்காணிக்கணும்
ADDED : பிப் 23, 2024 10:58 PM

உடுமலை:உடுமலை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட்டில் துவங்கி, புதிய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெறும் புறவழிச்சாலை; தளி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ச்சியாக புகார் மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொள்ளுமாறு, கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும், பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. நேற்று காலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தலைமையிலான குழுவினர், நகராட்சியினருடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கினர்.
முதற்கட்டமாக புறவழிச்சாலையில், ரோடு வரை, நீட்டிக்கப்பட்டிருந்த கூரை, கடை பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நகராட்சி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். 'பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திரும்ப வழங்கப்படாது; மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், அகற்றும் பணிக்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களே ஏற்க வேண்டும்,' என நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரித்தனர்.தொடர்ந்து, தினசரி சந்தை, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை வழியாக மேம்பாலம் வரை, ரோட்டின் இருபுறங்களிலும், கடையினர் வைத்திருந்த, பலகைகள் அகற்றப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த, படிக்கட்டுகள் உள்ளிட்ட கட்டுமானங்களும் இடிக்கப்பட்டன. இந்த ரோட்டில் பல கடையினர் தாங்களாகவே முன்புறம் இருந்த மேற்கூரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். நகரில் துவங்கி, எலையமுத்துார் பிரிவு, போடிபட்டி வழியாக வாளவாடி சந்திப்பு வரை இப்பணிகள் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், பிரதான ரோடுகள் அகலமாக காட்சியளித்ததுடன், வாகனங்களும் நெரிசல் இல்லாமல் பயணித்தன. இதே நிலை தொடர வேண்டுமானால், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.