/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஈஸ்வரன் - பெருமாள் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி ஈஸ்வரன் - பெருமாள் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி
ஈஸ்வரன் - பெருமாள் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி
ஈஸ்வரன் - பெருமாள் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி
ஈஸ்வரன் - பெருமாள் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி
ADDED : மார் 22, 2025 11:02 PM

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வரும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும்.
முதல் நாள், சோமாஸ்கந்தர் தேரும், இரண்டாவது நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்கும்.
தேர்களின் மேற்பகுதியில் உள்ள பலகைகள் சேதமான நிலையில் உள்ளன; பலகைகள் மீது, சாரம் அமைத்து, கலசம் பொருத்தப்படுகிறது. தேரோட்டத்தின் போது, தேர் சாரம் அசைந்தாடுவது அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு தேர்களையும் புதுப்பிக்க கோவில் நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.
அதற்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதால், நேற்று தேர் கூடாரம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று பெருமாள் கோவிலில் நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயல்அலுவலர் வனராஜா முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், பரமசிவம், பிருந்தா, பொன்னீஸ்வரன் மற்றும் பக்தர்கள் தேர்கள் செப்பனிடுவது குறித்து ஆலோசித்தனர்.
கூட்டம் குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''உபயதாரர் வாயிலாக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்களை புதுப்பிக்கும் பணிகள் நடக்க உள்ளது. பிரம்மா குதிரைகள் பழுதாகிவிட்டதால், விநாயகர் தேர் உட்பட, மூன்று தேர்களுக்கும், பிரம்மா குதிரைகள் புதிதாக வடிவமைக்கப்படும்.
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருப்பது போல், வீரராகவப்பெருமாள் கோவிலுக்கும், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனம் உட்படதிருவீதியுலாவுக்காக கூடுதல் வாகனங்கள் உருவாக்கப்படும்.
வரும் வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவுக்கு முன்னதாக, அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படும்,'' என்றார்.