Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் மக்களுக்கு அலைச்சல் குறையும்! புதிதாக 6 பிரிவு அலுவலகங்கள் அமைக்க முடிவு

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் மக்களுக்கு அலைச்சல் குறையும்! புதிதாக 6 பிரிவு அலுவலகங்கள் அமைக்க முடிவு

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் மக்களுக்கு அலைச்சல் குறையும்! புதிதாக 6 பிரிவு அலுவலகங்கள் அமைக்க முடிவு

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் மக்களுக்கு அலைச்சல் குறையும்! புதிதாக 6 பிரிவு அலுவலகங்கள் அமைக்க முடிவு

ADDED : செப் 02, 2025 08:10 PM


Google News
Latest Tamil News
உடுமலை: உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கோட்டத்தில், பொதுமக்கள், நிர்வாக வசதிக்காக புதிதாக ஆறு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்கள் உள்ளன. விவசாய மின் இணைப்பு, தொழிற்சாலை, வணிகம், வீட்டு மின் இணைப்பு என, ஏறத்தாழ, 5.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

39 பிரிவு அலுவலகங்கள் வரை உள்ள நிலையில், தொழிற்சாலைகள், வீடுகள் அதிகரிப்பு காரணமாக, ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும், மின் இணைப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

புதிதாக துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் என பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், அலுவலகங்கள் உருவாக்கப்படாமல் இருந்தது.

ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களுக்கு சராசரியாக, 150 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் அதற்குரிய மின் இணைப்புகள் பராமரிப்பு என இருந்தது.

இந்த நிலையில், தொழிற்சாலைகள், வணிகம், வீட்டு மின் இணைப்புகள் உள்ளிட்ட மின் இணைப்புகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, 250க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள், ஒவ்வொரு அலுவலகங்களுக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் என பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மின் நுகர்வோர் புதிய மின் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, பல கி.மீ., துாரம் உள்ள பகுதிகளிலுள்ள மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று, அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

தீர்வு கிடைக்கிறதுஉடுமலை கோட்டம் இதற்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக வசதிக்காக, உடுமலை கோட்டத்தில், குறிச்சிக்கோட்டை மற்றும் பாப்பான்குளம் ஆகிய இரண்டு புதிய பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது.

பாப்பான்குளம் மின் வாரிய பிரிவு அலுவலகத்தில், மடத்துக்குளம் பிரிவு அலுவலகத்திலிருந்து, ரெட்டிபாளையம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களும், குமரலிங்கம் பிரிவு அலுவலகத்திலிருந்து, சாமராயபட்டி, பெருமாள் புதுார் ஆகிய கிராமங்களும், உடுமலை தெற்கு அலுவலகத்திலிருந்து, சாளரப்பட்டி கிராமம் பிரிக்கப்பட்டு, புதிதாக பாப்பான்குளத்தில் புதிய பிரிவு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், உடுமலை கோட்டத்தில், குறிச்சிக்கோட்டையில் புதிய பிரிவு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், வாளவாடி, தளி, மானுப்பட்டி உதவி பொறியாளர் அலுவலகங்கள் கட்டுப்பாட்டிலிருந்த, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, குருவப்பநாயக்கனுார், சின்னக்குமாரபாளையம் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில், குறிச்சிக்கோட்டையில் புதிதாக உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி கோட்டம் அதே போல், பொள்ளாச்சி கோட்டத்தில், சுற்றிலும் உள்ள மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து, ஜோதி நகரில் ஒரு பிரிவு அலுவலகமும், அகிலாண்டபுரத்தில் ஒரு பிரிவு அலுவலகமும் உருவாக்கப்படுகிறது.

அங்கலக்குறிச்சி கோட்டத்திலிருந்து, தேவனுார் புதுார் வடக்கு மற்றும் கோட்டூர் ஆகிய இரு பிரிவு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிவு அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு, இதற்காக ஆறு உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த ஜூலை, 27 முதல், புதிய அலுவலகங்களுக்கான டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் இணைப்புகள், அலுவலக எல்லை உள்ளிட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய அலுவலகங்களில், உதவிப்பொறியாளர், மின் ஆய்வாளர், கம்பியாளர், வயர்மேன், உதவியாளர், கணக்கீட்டாளர், வருவாய் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, உரிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதன் வாயிலாக, மின் நுகர்வோர் பிரிவு அலுவலகங்களை எளிதில் அணுக முடியும். மின் தடை உள்ளிட்ட மின்வாரியம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும்.

உடுமலை கோட்டத்திலுள்ள, குறிச்சிக்கோட்டை மற்றும் பாப்பான்குளம் பிரிவு அலுவலகங்கள் வரும், 6ம் தேதி முதல் செயல்பட உள்ளது. மீதம் உள்ள பிரிவு அலுவலகங்களும் விரைவில் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us