/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய குழு கூட்டம் ரத்துகவுன்சிலர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய குழு கூட்டம் ரத்து
கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய குழு கூட்டம் ரத்து
கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய குழு கூட்டம் ரத்து
கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய குழு கூட்டம் ரத்து
ADDED : ஜன 05, 2024 11:48 PM

பல்லடம்;பல்லடம் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு, பி.டி.ஓ., க்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வந்திருந்தனர். ஆனால், 12:00 மணி ஆகியும் கூட்டம் துவங்கவில்லை. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி (தி.மு.க.,) தாமதமாக வந்த நிலையில், பி.டி.ஓ.,வுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையே, கூட்ட அரங்குக்குள் செல்லாமல், கவுன்சிலர்கள் அனைவரும் பி.டி.ஓ., அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர். தொடர்ந்து, கவுன்சிலர்கள் அனைவரும் இணைந்து பி.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: ஊராட்சி ஒன்றிய குழு பொது நிதி, 1.25 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. இதை, ஒன்றிய பகுதிகளுக்கான மக்கள் நல பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஒன்றிய குழு தலைவர் தொடர்ந்து இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
பொதுமக்களின் நலன் கருதி, உடனடியாக ஒன்றிய பொது நிதியை, ஒன்றிய பகுதிகளுக்கான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். ஒன்றிய குழு தலைவரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிய குழு தலைவர் தேன்மொழியிடம் கேட்டதற்கு, 'கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வராததால் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது,' என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.