Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!

இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!

இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!

இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!

ADDED : ஜூன் 10, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
உடுமலை; உடுமலை வேளாண் துறையின், ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தில், நடப்பாண்டு மூவாயிரம் 'டிரைகோ கிரமா ஹைலோனிஸ்' உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது. பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள், புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, இந்த ஒட்டுண்ணிகளை பயன்படுத்தினால், செலவு குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை வேளாண் துறை சார்பில், ஒட்டுண்ணி மையம் செயல்படுகிறது. சேலம், கோவை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும், ஒட்டுண்ணி மையம் செயல்படும் நிலையில், உடுமலையில் ஒட்டுண்ணி உற்பத்தி மையம் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

உடுமலை வேளாண் துறை, ஒட்டுண்ணி உற்பத்தி மையத்தில் 'டிரைகோகிரைமா கைலோனிஸ்' எனப்படும் ஒட்டுண்ணி உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இலக்கு நிர்ணயம்


இம்மையத்தில், நடப்பாண்டு, 3 ஆயிரம் 'சிசி' (ஒரு 'சிசி' என்பது 20 ஆயிரம் முட்டை தொகுதிகள்) உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிரப்படுத்தப்பபட்டுள்ளது.

கரும்பு பயிரை தாக்கும் குருத்து துளைப்பான்களால், நடுக்குருத்து காய்ந்தும், தோகை நிறம் இழத்தல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பயிர்கள் முழுமையாக பாதிக்கும் நிலையில், இயற்கை முறையில் நன்மை செய்யும் ஒட்டுண்ணி வாயிலாக, இதனை அழிக்க முடியும்.

அதே போல், கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த இயற்கை உயிரியல் முறை சிறந்தது.

சிறந்த முறை


மேலும், நெற் பயிரை தாக்கும் தண்டுப்புழு, இலைச்சுருட்டு புழு ஆகியவற்றையும், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை தாக்கும் வெள்ளை அசுவினி பூச்சி, புழுக்கள், மக்காச்சோளத்தை வேகமாக பரவி அழித்து வரும், ராணுவ படைப்புழுக்கள் என, பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு அழிக்கும் சிறந்த உயிரியல் முறையாக இது உள்ளது.

காய்கறி பயிர்களில் பூச்சி, புழு தாக்குதலுக்கு உயிரியல் முறையாக ஒட்டுண்ணி வளர்த்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உற்பத்தி துவக்கம்


உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:

நெற்பயிரில் காணப்படும் அத்துப்பூச்சி முட்டையிலிருந்து, பல்வேறு படிநிலைகளில், குழவி வடிவத்திலுள்ள மிகவும் சிறிய வடிவத்திலுள்ள நுண்ணுயிராக 'டிரைகோகிரைமா கைலோனிஸ்' உற்பத்தி செய்யப்படுகிறது.

பருவமழையை தொடர்ந்து, விவசாயிகள் கரும்பு, நெல், காய்கறி பயிர் சாகுபடியை துவக்கியுள்ள நிலையில், இம்மையத்தில் தற்போது ஒட்டுண்ணி உற்பத்தி துவங்கியுள்ளது. கம்பு, ஈஸ்ட், சல்பர் கலந்து, கார்சைரா எனப்படும் பூச்சி உற்பத்தி செய்து, அதன் முட்டையிலிருந்து, 'டிரைகோகிரைமா கைலோனிஸ்' ஒட்டுண்ணி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு, ஒரு 'சிசி' ( 20 ஆயிரம் முட்டைகள்) கொண்ட அட்டை போதுமானதாகும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒட்டுண்ணி அட்டையை பயிர்களின் அடிப்பகுதியில் கட்டி தொங்க விட வேண்டும்.

பாதுகாப்பானது


இந்த ஒட்டுண்ணிகள் கண்களுக்கு தெரிவதில்லை; ஆனால், பூச்சிகளாக உருவாகி, பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சி, புழுக்களின் முட்டைகள் அனைத்தையும் கண்டு பிடித்து கவர்ந்து உணவாக கொள்கிறது. மேலும், இது அதிக முட்டை இட்டு, பெருகி பயிர்களை காக்கிறது. இதனை கரும்பு, நெல், காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

பயிர்களை தாக்கும் புழு, பூச்சிகளை கட்டுப்படுத்த, இயற்கையான ஒட்டுண்ணி முறையை பயன்படுத்தும் போது, நல்ல தீர்வு கிடைக்கிறது. பூச்சி கொல்லி மருந்துகளுக்கு, பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும், பயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒட்டுண்ணி முறையில், மிகவும் குறைந்த செலவில் இயற்கையான முறையில் தீர்வு கிடைக்கிறது.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us