/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு நகர்வு.. ஸ்தம்பித்தது... கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்புஅமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு நகர்வு.. ஸ்தம்பித்தது... கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு நகர்வு.. ஸ்தம்பித்தது... கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு நகர்வு.. ஸ்தம்பித்தது... கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு நகர்வு.. ஸ்தம்பித்தது... கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 01, 2025 11:24 PM

திருப்பூர்: அதிகபட்ச இறக்குமதி வரிவிதிப்பால், அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு போக்குவரத்து, ஆறு நாட்களில், வெகுவாக சரிந்துவிட்டதாக, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும், மீண்டெழுவோம் என்கின்றனர் தொழில் துறையினர்.
திருப்பூர் பின்னலாடை தொழில் என்பது, ஒரே வளாகத்தில் மூலப்பொருளை உற்பத்தி பொருளாக மாற்றும் தொழில் அல்ல. 'நிட்டிங்' துவங்கி பேக்கிங் வரை, 14 வகையான 'ஜாப் ஒர்க்' சேவைகளும் இடம்பெறுகின்றன. அந்தவகையில், பனியன் தொழிலில் எந்தவொரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், மற்ற பிரிவுகளிலும் அது எதிரொலிக்கும்.
சாய ஆலைகள் பிரச்னை, நுால்விலை உயர்வு என, பல்வேறு பிரச்னைகளின் போது ஒட்டுமொத்த பாதிப்பு எதிரொலித்தது. அதன்படி, அமெரிக்காவில், இறக்குமதி வரியை உயர்த்தியது, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்திலும் எதிரொலிக்கிறது.
அமெரிக்கா -திருப்பூர் இடையே, நேரடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது. உலகில் உள்ள, 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.
பனியன் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், தினமும், 200 லாரிகளில், துாத்துக்குடி துறைமுக சரக்குமுனையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதாவது, 25 அடி நீளமுள்ள கன்டெய்னரில், பெரிய பெட்டிகள், 400 முதல், 450 ஏற்றிச்செல்லப்படும். அதில், ஆடைகள் அளவை பொறுத்து, 80 முதல், 150 ஆடைகள் இடம்பெற்றிருக்கும்.
பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி ஆடைகள், கன்டெய்னரில் லாரிகளில் சென்றாலும், அமெரிக்காவுக்கு செல்லும் ஆடைகள் மட்டும், தினமும், 30 முதல், 40 லாரிகளில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், இந்திய பொருட்களை இறக்குமதி செய்தால், அந்நாட்டு வர்த்தகர்கள், 50 சதவீதம் வரி செலுத்தியாக வேண்டும். புதிய வரி உயர்வால், ஏற்றுமதி வர்த்தகம் விசாரணை அளவிலேயே தொடர்கிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்கள் மட்டும், வரி பகிர்வு பேச்சுவார்த்தைப்படி அனுப்பி வைக்கப்படுகிறது.
குறைந்துவிட்டது கன்டெய்னர் லாரி உரிமையாளர் குட்டி கூறுகையில், ''அமெரிக்க ஏற்றுமதிக்கான ஆடைகள், திருப்பூரில் இருந்து செல்வது குறைந்துவிட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் அதிகம் அமெரிக்காவுக்குத்தான் செல்கிறது.
குறிப்பாக, அமெரிக்காவுக்கு, 100 சதவீதம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், தொடர்ச்சியாக சரக்கை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். வரி உயர்வு பிரச்னையால், கன்டெய்னர் லாரிகள் இயக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், உள்நாட்டு சந்தைகளுக்கு, பனியன் ஆடைகளை கொண்டு செல்ல, விசாரித்து வருகிறோம்.
திடீரென, அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பால், கன்டெய்னர் தொழில் கடும் சோதனையை சந்தித்து வருகிறது,'' என்றார்.
மாற்று வர்த்தகம் கன்டெய்னர் லாரி உரிமையாளர் லோகேஸ்வரன் கூறுகையில், ''ஒரே வாரத்தில், ஒட்டுமொத்த கன்டெய்னர் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கான ஓட்டம் தொடர்கிறது. இருப்பினும், திடீரென அமெரிக்க ஆர்டருக்கான போக்குவரத்து தடைபட்டதால், லாரி போக்குவரத்திலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும், 12 முதல் 15 லாரிகள் அமெரிக்க ஆர்டரை எடுத்துச்செல்லும்; கடந்த ஒரு வாரமாக, வேலையிழந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அரசு விரைவில், மாற்று வர்த்தக வாய்ப்பை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
அமெரிக்க ஏற்றுமதி
10 சதவீதம் சரிவு
அமெரிக்காவுக்கான கப்பல் போக்குவரத்து மந்தமாகிவிட்டது. ஏற்றுமதிக்கான வழக்கமான சரக்கு போக்குவரத்தில், 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. எங்களது சரக்கு முனையத்தில் இருந்து, மொத்த சரக்குகளில், 20 சதவீதம் அமெரிக்கா செல்லும். கடந்த சில நாட்களில், அமெரிக்க ஏற்றுமதியில், 10 சதவீதம் குறைந்துவிட்டது.
இருப்பு வைத்துள்ள பின்னலாடைகளை அனுப்பி வருவதாக கூறுகின்றனர்; புதிய ஆடை உற்பத்தி செய்து அனுப்புவது இனி சிரமம்தான். பிரிட்டனுடன், வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், அமெரிக்காவுக்கு மாற்றாக, பரிட்டனுக்கு ஏற்றுமதி வாய்ப்பை பெருக்கலாம் என்று, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அமெரிக்க கோர்ட் தீர்ப்பு, சுமூக தீர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இருப்பினும், பேச்சுவார்த்தை மூலமாக சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
- கண்ணன்,
துாத்துக்குடி சரக்குமுனைய உரிமையாளர்.