Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஆன்லைன்' வர்த்தகத்தால் குறையும் வியாபாரம்! மாற்று வழி தேடும் காதர்பேட்டை வியாபாரிகள் 

'ஆன்லைன்' வர்த்தகத்தால் குறையும் வியாபாரம்! மாற்று வழி தேடும் காதர்பேட்டை வியாபாரிகள் 

'ஆன்லைன்' வர்த்தகத்தால் குறையும் வியாபாரம்! மாற்று வழி தேடும் காதர்பேட்டை வியாபாரிகள் 

'ஆன்லைன்' வர்த்தகத்தால் குறையும் வியாபாரம்! மாற்று வழி தேடும் காதர்பேட்டை வியாபாரிகள் 

ADDED : ஜூன் 01, 2025 07:06 AM


Google News
திருப்பூர், : 'ஆன்லைன்' வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மொத்த வியாபாரம் பாதிக்கப்படுவதாக, காதர்பேட்டை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்; புதிய யுத்தியை கையாளவும் தயாராகி வருகின்றனர்.

திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகள் மற்றும், உபரியாகும் ஏற்றுமதி உற்பத்தி ஆடைகள், காதர்பேட்டையில் விற்கப்படுகிறது; அங்கு சில்லரை விற்பனை நடப்பதில்லை. டில்லி வரை உள்ள, உள்நாட்டு ஜவுளி சந்தை வியாபாரிகள் மற்றும் ஆடை விற்கும் ஏஜன்டுகள், திருப்பூர் வந்து ஆடைகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.

மாதம் இருமுறை வரும் வியாபாரிகள், ஆர்டர் கொடுத்து செல்வார்கள்; அதற்கு பிறகு, திருப்பூரில் இருந்து ஆடைகள் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், வங்கதேச ஆடைகள் வரத்து அதிகரித்ததால், வடமாநில சந்தைகளில், திருப்பூர் பருத்தி ஆடைகளுக்கான கிராக்கி குறைந்தது.

விலை அதிகம் என்பதால், திருப்பூர் ஆடைகளுக்கு பதிலாக, வங்கதேச ஆடைகளை வாங்கி பயன்படுத்த துவங்கினர். இதன்காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக மொத்த வியாபாரம் மந்தமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஆன்லைன்' வர்த்தகம் சூடு பிடிக்க துவங்கிவிட்டது.

எளிதாக, 'டிஜிட்டல்' முறையில் பணத்தை அனுப்பிவிட்டு, தேவையான ஆடைகள் வாங்குவது அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளும், அதுபோன்ற வசதியை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன்காரணமாக, திருப்பூருக்கு மொத்த வியாபாரிகள் வந்து செல்வதும், ஆர்டர் கொடுப்பதும் குறைந்து வருகிறது.

இதன்காரணமாக, மொத்த வியாபாரிகளே, சில்லரை வியாபாரிகளை உருவாக்கி, அவர்கள் மூலமாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட பகுதிகளில், ரோட்டோர கடைகளை நடத்த துவங்கிவிட்டனர். ஆகமொத்தம், 'ஆன்லைன்' வர்த்தகம் வளர்ச்சி பெறுவதால், மொத்த வியாபாரம் படிப்படியாக குறைந்து வருவதாக, காதர்பேட்டை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இளைஞர்கள், புதிய யுத்தியை கையாண்டும், 'ஆன்லைன்' வர்த்தகத்துக்கு மாறியும், தொடர்பை வலுப்படுத்த தயாராகி வருகின்றனர்.

காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:

'ஆன்லைன் வர்த்தகத்தால், முதலீடே இல்லாமல், சிலர் வருமானம் பார்க்க துவங்கிவிட்டனர். முன்கூட்டியே பணத்தை கொடுத்தால், அதில் முறைகேடு அபாயமும் இருக்கிறது. சில்லரை வர்த்தகம் செய்ய, ஆன்லைன் வர்த்தக முறை ஏற்றது. ஆனால், மொத்த வியாபாரம் செய்வதில் பல்வேறு சிக்கல் உள்ளது. ஏமாறும் போது பண மோசடிக்கு ஆளாகின்றனர். மொத்த வியாபாரம் மந்தமாக நடப்பதால், காதர்பேட்டையின் வழக்கமான வியாபாரம் மிகவும் குறைந்து போயுள்ளது; சில்லரை விற்பனைக்கான வியாபாரம் கை கொடுக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us