ADDED : பிப் 23, 2024 11:41 PM
மாணவர்கள், தங்களின் பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற நேரம் எது? என்பது குறித்து பலர் பலவிதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம்.
அதில் பெரும்பாலானோர், அதிகாலை நேரமே படிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறியிருப்பார்கள். அப்போதுதான், மனம், எந்த சிந்தனைகளுமின்றி துாய்மையாக இருக்கும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்றும் கூறியிருப்பார்கள்.
ஆனால், இதற்கு, மாறுபட்ட கருத்தைக் கூறுவோர் அதிகம் உள்ளனர். இரவோ, அதிகாலையோ அல்லது மாலை நேரமோ, யாருக்கு எந்தநேரம் ஒத்துவருகிறதோ, அந்த நேரத்தில் படிப்பதே நல்லது என்பதுதான் அவர்களின் கருத்து.
சிலருக்கு இரவில் விழிப்பது பிடிக்கலாம், சிலருக்கு அதிகாலையில் படிப்பதுதான் பிடிக்கலாம், சிலருக்கோ, மாலையில் துவங்கி, இரவு 9:00 மணிக்குள் படித்துவிடுவது பிடிக்கலாம். எனவே, அவரவர் மனநிலைதான் இந்த விஷயத்தில் முக்கியம்.
வாழ்வில் வெற்றியடைந்த பலரை, அவர்கள் எந்த நேரத்தில் படிப்பீர்கள் என்று கேட்கும்போது, அவர்களில் பெரும்பாலானோர் சொல்வது, இரவு நேரத்தைத்தான் என்பதை நாம் கவனிக்கலாம்.
இரவு நேரத்தைப் பொறுத்தவரை, ஒரு பெரிய நன்மை என்னவெனில், அதீத அமைதி நிலவும் நேரமாக இரவு நேரம் இருக்கிறது. ஆனால், அதிகாலை நேரம் என்பது அப்படியல்ல. பால்காரர் சத்தம் தொடங்கி, வீட்டு வாசல்களை பெருக்கி, வாசல் தெளிக்கும் சத்தம் தொடங்கி, வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் சத்தம் தொடங்கி, பலவிதமான சத்தங்கள் அதிகாலையில் தொடங்கிவிடும். ஏனெனில், நம்மோடு சேர்ந்து, பலரும் அதிகாலையில் எழுவார்கள்.
ஆனால், இரவைப் பொறுத்தவரை, நாய்கள் குரைக்கும் சத்தம் வேண்டுமானால் எப்போதேனும் தொல்லை தரலாம். ஏதேனும் வாகனம் வரும் சத்தம் கேட்கலாம். மற்றபடி, நள்ளிரவை நெருங்க நெருங்க, அமைதி கூடிக்கொண்டே செல்லும். அதுதான், இரவுநேரப் படிப்பின் பலமே.
சிலரைப் பொறுத்தமட்டில், வெளியிலிருந்து வரும் இரைச்சல் குறித்து அதிகம் தொந்தரவையோ அல்லது இடைஞ்சலையோ உணர மாட்டார்கள். அவர்களது இல்லத்தில், இன்னொரு அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம்கூட கேட்டுக் கொண்டிருக்கும் அல்லது பாட்டு ஓடிக் கொண்டிருக்கும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தமோ கேட்கலாம்.
ஆனால், இவையெல்லாம் அவர்களுக்கு பெரிய தொந்தரவாகவே இருக்காது. படிக்கும் நேரம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். இரவு, 9:00 மணி, மிஞ்சிப்போனால், 10:00 மணிக்குள் அவர்கள் படிப்பை முடித்து விடுவர்.
இன்னும் சிலருக்கு, காலை உணவை அருந்திய பின்னர், படிக்க துவங்கி, மதிய உணவிற்குள்ளான நேரத்திற்குள் படிக்க பிடிக்கும். ஏனெனில், மதியத்திற்கு மேல், துாக்கம் சொக்கும் என்பதால், மேற்கண்ட நேரத்தை தேர்ந்தெடுப்பர்.