/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் அதிகரிக்கும் விவசாய பரப்பு! 'சர்வே' செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் அதிகரிக்கும் விவசாய பரப்பு! 'சர்வே' செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் அதிகரிக்கும் விவசாய பரப்பு! 'சர்வே' செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் அதிகரிக்கும் விவசாய பரப்பு! 'சர்வே' செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் அதிகரிக்கும் விவசாய பரப்பு! 'சர்வே' செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 22, 2025 11:01 PM

திருப்பூர்: 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தால், விவசாய பரப்பு அதிகரித்துள்ளதா, கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதா, அதனால் மோட்டார் இயக்குவதற்கான மின் செலவு குறைந்துள்ளதா என்பது விவரங்களை கள ஆய்வு வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்' என, விவசாய அமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், 1,916 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மூன்று மாவட்டங்களிலும், 1,045 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறட்சியான பகுதிகள், பசுமைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் விவசாய பரப்பு அதிகரித்திருக்கிறது.
இது குறித்து, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டை பாதுகாப்பு சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது:
அத்திக்கடவு திட்டத்தால், பெருந்துறை உள்ளிட்ட இடங்களில், 400 அடிக்கு கீழ் இருந்த நீர்மட்டம், 50 அடிக்கு வந்துள்ளது. இதனால், விவசாயப் பரப்பு அதிகரித்திருக்கிறது.
தென்னங்கன்று, தர்பூசணி, வாழை சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். திருப்பூர், குன்னத்துார் உள்ளிட்ட இடங்களில், 50 ஆண்டு இடைவெளிக்கு பின், நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தாங்களே நெல் விளைவித்து, அதன் வாயிலாக கிடைக்கும் அரிசியில் சமைத்து உண்ண வேண்டும் என்ற ஆவல் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 20, 30 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்த பல கிணறுகள் தரை தட்டிக் கிடந்தன. 'போர்வெல்' நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கிணறுகள் நிரம்பியுள்ளன.
'போர்வெல்' பயன்பாடு குறைந்து, மின் செலவும் குறைந்திருக்கிறது. அத்திக்கடவு திட்டத்தால் விவசாய பரப்பு அதிகரித்துள்ளதா, புதிதாக பயிரிடப்பட்டுள்ள பயிர், குறைந்துள்ள 'போர்வெல்' பயன்பாடு, அதனால் ஏற்பட்டுள்ள மின் சிக்கனம் உள்ளிட்ட விவரங்களை, 'அத்திக்கடவு திட்டத்துக்கு முன், பின்' என்ற அளவில் 'சர்வே' செய்து அறிக்கை தயாரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில்,''அத்திக்கடவு திட்டத்தால் விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
முந்தைய ஆண்டுகளில் மழைநீரை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள், மானாவாரி பயிரான சோளம் உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வந்தனர்.
தற்போது வெங்காயம், தென்னங்கன்று, வாழை உள்ளிட்ட பணப்பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைத்து, நீர் செறிவூட்டும் பணியை துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.