/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சட்டசபை தேர்தல் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் 'கிலி' தேங்கிய பணிகளை முடிக்க அரசுக்கு நிர்பந்தம் சட்டசபை தேர்தல் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் 'கிலி' தேங்கிய பணிகளை முடிக்க அரசுக்கு நிர்பந்தம்
சட்டசபை தேர்தல் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் 'கிலி' தேங்கிய பணிகளை முடிக்க அரசுக்கு நிர்பந்தம்
சட்டசபை தேர்தல் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் 'கிலி' தேங்கிய பணிகளை முடிக்க அரசுக்கு நிர்பந்தம்
சட்டசபை தேர்தல் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் 'கிலி' தேங்கிய பணிகளை முடிக்க அரசுக்கு நிர்பந்தம்
ADDED : மே 23, 2025 11:58 PM
திருப்பூர் : அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், உள்ளாட்சிகளில் அங்கம் வகிக்கும் ஆளுங்கட்சி தலைவர்கள், வாக்காளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், பொதுநிதியில் இருந்து வளர்ச்சிப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என, முதல்வர், அமைச்சருக்கு மனு வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெருமளவில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அங்கம் வகிக்கின்றனர். கடந்த நான்காண்டில், அரசின் சார்பில் திருப்தியளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இல்லை என்ற குறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் மத்தியில் உள்ளது.
இது குறித்து, ஆளுங்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஆரம்ப நிலையில் இருந்தே, நிதி பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்பட்டாலும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே மக்களின் முழு ஆதரவை பெற முடியும். அரசின் நிதி ஒதுக்கீடு போதியளவு இல்லாததால் சாலை வசதி, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தென்படுகிறது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வார்டு உள்ளாட்சிகளில் மக்களின் ஆதரவை பெற, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. 'நாங்கள் வெற்றி பெற்றால் அத்தகைய பணிகளை செய்து கொடுப்போம்' என்ற வாக்குறுதியை அளித்து தான், ஓட்டு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அந்த பணிகளை செய்து கொடுக்காவிட்டால், ஓட்டுகள் கைநழுவும். தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அந்தந்த உள்ளாட்சிகளில் உள்ள பொது நிதியை பயன்படுத்தி, அத்தியாவசிய பணிகளை செய்து கொடுக்க, அரசு அனுமதியளிக்க வேண்டும்.
கட்சித்தலைமை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அந்தந்த மாவட்ட செயலர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் மட்டும் கலந்தாலோசிக்காமல், உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை, கருத்துகளையும் கேட்க வேண்டும். தேர்தலுக்குள், வார்டுகளில் விடுபட்ட பணிகளை செய்து கொடுப்பதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தையாவது அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.