/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் குடிநீர்; இச்சிப்பட்டியில் ஆய்வு கூடுதல் குடிநீர்; இச்சிப்பட்டியில் ஆய்வு
கூடுதல் குடிநீர்; இச்சிப்பட்டியில் ஆய்வு
கூடுதல் குடிநீர்; இச்சிப்பட்டியில் ஆய்வு
கூடுதல் குடிநீர்; இச்சிப்பட்டியில் ஆய்வு
ADDED : செப் 14, 2025 11:51 PM

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சார்ந்து, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஒன்றரை மாத காலமாக சரிவர வினியோகிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சில நாட்களுக்கு முன், பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பி.டி.ஓ., ஆகியோர் இங்கு வந்தால்தான், போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி, பெண்கள், பொதுமக்கள் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். கூடுதல் குடிநீர் வழங்கக்கோரி, ஊராட்சி நிர்வாகம் மூலம் கடிதம் பெற்று, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தற்போது, 2.40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மக்கள் தொகை அடிப்படையில், இதை, 5.72 லட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பி.டி.ஓ., வேலுசாமி அப்போதே கடிதம் எழுதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வழங்கினார்.
நேற்று முன்தினம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதிதாக பொருத்தப்பட்டுள்ள மீட்டர்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் குடிநீர் வினியோகிக்கும் வகையில், மீட்டர்களில் அளவீடுகள் மாற்றி அமைக்கப்பட்டன.