/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வயதை உறுதிப்படுத்த ஆதார் ஆவணமாகாது! குழந்தைகள் நலக்குழு தலைவர் அறிவுறுத்தல்வயதை உறுதிப்படுத்த ஆதார் ஆவணமாகாது! குழந்தைகள் நலக்குழு தலைவர் அறிவுறுத்தல்
வயதை உறுதிப்படுத்த ஆதார் ஆவணமாகாது! குழந்தைகள் நலக்குழு தலைவர் அறிவுறுத்தல்
வயதை உறுதிப்படுத்த ஆதார் ஆவணமாகாது! குழந்தைகள் நலக்குழு தலைவர் அறிவுறுத்தல்
வயதை உறுதிப்படுத்த ஆதார் ஆவணமாகாது! குழந்தைகள் நலக்குழு தலைவர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 12, 2024 10:43 PM
உடுமலை;'போலிகள் அதிகரித்துவிட்டதால், வயதை உறுதி செய்யும் ஆவணமாக, ஆதார் கார்டை பிரதானமாக பயன்படுத்தக்கூடாது,' என, பயிற்சி முகாமில், கிராம சுகாதார செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், கிராமப்புற செவிலியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா தலைமை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது:
ஆதார் கார்டில், பிறந்த தேதி விபரங்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும், குழந்தை தொழிலாளர்களை கண்டறியும்போது, வயதை உறுதிப்படுத்தும் பிரதான சான்றாக, ஆதார் கார்டை பயன்படுத்தக்கூடாது. துணை ஆவணமாக மட்டுமே ஆதாரை பயன்படுத்தலாம்.
போலி ஆதார் கார்டுகள் அதிகரித்துவிட்டன. 15, 16 வயது குழந்தைகளை, 19, 20 வயது என, வயதை உயர்த்தி, மோசடியாக ஆதார் கார்டு தயார் செய்து விடுகின்றனர்.
ஆதார் தவிர, குழந்தையின் பிறப்புச்சான்று, பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டி.சி.,) ஆகிய மாற்று ஆவணங்களை கேட்டு பெற்று, வயதை உறுதி செய்யவேண்டும்.
கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும்போது, பிறப்புச்சான்று கட்டாயம் பெறவேண்டும் என, சுகாதார செவிலியர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதனால், சம்பந்தப்பட்ட குழந்தையின் வயதை உறுதி செய்ய, பிறப்புச்சான்றிதழை வாங்கி சரிபார்க்கவேண்டும்.
குழந்தைகள் நலக்குழுவை பொறுத்தவரை, குழந்தையின் வயதை உறுதிப்படுத்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழுக்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது.
சுகாதார செவிலியர்கள் தங்கள் மொபைல் போனில், க்யூ.ஆர்., ஸ்கேனர் செயலியை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் ஆதார் கார்டில் உள்ள க்யூ.ஆர்., கோர்டை ஸ்கேன் செய்யும்போது, எழுத்துவடிவில் பெயர், ஊர் விபரங்கள் வந்தால் ஒரிஜினல் ஆதார் கார்டு; ஆதாரில் முறைகேடாக மாற்றம் செய்திருந்தால், ஸ்கேன் செய்யும்போது எந்த விவரமும் இடம்பெறாது. இதனை வைத்து, போலி ஆதார் கார்டை கண்டுபிடித்து விடலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சரோஜா பேசுகையில், ''கிராமப்புற சுகாதார செவிலியர்கள், தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பதின்ம வயது கர்ப்பம் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக போலீசார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்,'' என்றார்.
இளம் சிறார் நீதிக்குழு உறுப்பினர் சண்முகம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.