/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊர்ப்புற நுாலகத்துக்கு காத்திருக்கும் ஒன்றியம் கிடப்பில் நீண்ட கால கோரிக்கைஊர்ப்புற நுாலகத்துக்கு காத்திருக்கும் ஒன்றியம் கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
ஊர்ப்புற நுாலகத்துக்கு காத்திருக்கும் ஒன்றியம் கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
ஊர்ப்புற நுாலகத்துக்கு காத்திருக்கும் ஒன்றியம் கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
ஊர்ப்புற நுாலகத்துக்கு காத்திருக்கும் ஒன்றியம் கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
ADDED : ஜன 12, 2024 12:01 AM
உடுமலை;குடிமங்கலம் ஒன்றியத்தில், ஊர்ப்புற நுாலகம் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், பெதப்பம்பட்டி, பூளவாடி, குடிமங்கலம், ராமச்சந்திராபுரம் ஆகிய இடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகளும், கொங்கல்நகரம், வேலுார், புக்குளம் உட்பட உயர்நிலைப்பள்ளிகளும், பத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.
கிராமப்புறங்களிலுள்ள அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு உட்பட காரணங்களால், ஆண்டுதோறும், படித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், அரசு போட்டித்தேர்வில் பங்கேற்க, கிராமப்புற இளைஞர்களும் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது. ஆனால், இத்தேர்வுகளுக்கு தயாராக தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இந்த ஒன்றியத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், பெதப்பம்பட்டி, பூளவாடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும், கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நுாலகங்களுக்கு, ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ள வீதம்பட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு, சிக்கனுாத்து, அனிக்கடவு, பெரியபட்டி உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, அனைத்து தரப்பினரும் வந்து செல்வது மிகுந்த சிரமமானதாகும்.
எனவே, குறிப்பிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து, ஊர்ப்புற நுாலகங்கள் துவக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், ஊராட்சிகளில், துவக்கப்பட்ட 'அண்ணா நுாலகமும்' பெயரளவுக்கே செயல்பட்டு வருகிறது. பல இடங்களில், இவ்வகை நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது.
போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இரண்டு பஸ் மாறி, உடுமலையிலுள்ள நுாலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் சார்பில், பல முறை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியும் பலனில்லை.
ஊராட்சி நிர்வாகத்தினரிடம், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அளித்த மனுக்களுக்கும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நுாலகத்துறையினர் கூறியதாவது: கிராமப்புறங்களில், ஊர்ப்புற நுாலகம் துவங்க, பல்வேறு வழிகாட்டுதல்கள், நுாலக ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிராமங்களில், 200 உறுப்பினர்களை சேர்த்து, ஊராட்சி அல்லது தனியாரால், 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
வாடகைக்கட்டடம் இல்லாமல், சொந்த கட்டடத்தில், 5 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஊர்ப்புற நுாலகம் துவங்கலாம்.
தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி, அந்நுாலகத்துக்கு, 3 புரவலர்கள் பெற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை ஊராட்சி நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்து மேற்கொண்டால், தொடர்ந்து, மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், புத்தகங்கள் வழங்கப்பட்டு, மற்றும் இதர வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.